லோக்சபா தேர்தல்-இன்று மாலை தேதி அறிவிப்பு?

டெல்லி: நாடே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ள லோக்சபா தேர்தலுக்கான தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவிக்கிறது.

இந்தியாவில் ‘தேர்தல் திருவிழா’ தொடங்கி விட்டது. தேர்தல் தேதி என்ற ‘கொடி மரம்’ நடப்படுவதற்காக அரசியல் தலைவர்களும், தொண்டர்களும், மக்களும் காத்துள்ளனர்.

தேதியை முடிவு செய்வதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தியது. முதலில் அரசியல் கட்சித் தலைவர்கள், பின்னர் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள், பிறகு மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள், காவல்துறைத் தலைவர்கள் ஆகியோருடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து மத்திய உள்துறை செயலாளர் மதுகர் குப்தாவுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர்.

அனைத்துக் கட்ட ஆலோசனைகளும் முடிந்த நிலையில் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

தேர்தல் தேதியை 3 ஆணையர்களும் சேர்ந்துதான் அறிவிப்பது வழக்கம். ஆனால் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா விடுமுறையில் போயிருந்ததால் நேற்று தேதியை அறிவிக்க முடியவில்லை.

இந் நிலையில் இன்று காலை மூன்று தேர்தல் ஆணையர்களும் கூட இறுதிக் கட்ட ஆலோசனையில் ஈடுபட்டனர். இதையடுத்து இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது.

5 – 7 கட்ட வாக்குப்பதிவு:

தேர்தல் பல கட்டங்களாக நடைபெறும் எனத் தெரிகிறது. குறைந்தது ஐந்து முதல் அதிகபட்சம் 7 கட்டங்கள் வரை தேர்தல் நடக்கக் கூடும் எனத் தெரிகிறது.

சிறிய மாநிலங்களில் ஒரே கட்ட வாக்குப் பதிவும், பெரிய மாநிலங்களில் பல கட்ட வாக்குப்பதிவும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.