வித்தியாதரனின் பாதுகாப்பை உறுதிசெய்ய பத்திரிகையாளர் சம்மேளனம் வலியுறுத்து: கைதானவிதம் குறித்தும் கண்டனம்

“உதயன்”, “சுடர் ஒளி” ஆசிரியர் ந. வித்தியாதரன் எங்கு தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார் என்பதை உடனடியாக வெளியிடுமாறு இலங்கை அரசிடம் கேட்டுக்கொண்டுள்ள சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் அவரது பாதுகாப்புக் குறித்துக் கடும் அச்சம் வெளியிட்டுள்ளது. அத்துடன் வித்தியாதரன் கைதானவிதம் குறித்தும் பத்திரிகை ஸ்தாபனம் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளது.

வித்தியாதரன் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் எய்டன் வைட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் பணிபுரியும் அனைத்துப் பத்திரிகையாளர்களினதும் பாதுகாப்பு மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது என மேலும் தெரிவித்துள்ள அவர், சகல சர்வதேச ஊடக சுதந்திர அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளை வித்தியாதரனின் பாதுகாப்புக் குறித்து அறிவதற்கான உடனடி நடவடிக்கைகளில் இறங்குமாறும் கோரியுள்ளார்.

இதேவேளை ஆசிரியர் வித்தியாதரனின் கைது தொடர்பாக சுதந்திர ஊடக இயக்கம் உள்ளிட்ட உள்நாட்டு ஊடக அமைப்புகளும் சர்வதேச பத்திரிகை சம்மேளனங்களும் கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

அதில் தெரிவித்திருப்பதாவது:

விசாரணையின் பொருட்டு பத்திரிகை ஆசிரியர் ஒருவர் தேவைப்படும் பட்சத்திலோ அவரோ அன்றேல் எந்தவொரு பிரஜையோ எதற்காக அவர் கைது செய்யப்படுகிறார் என்று கூறப்படுவதுடன் அவரைக் கைது செய்யமுன் நீதிமன்ற அனுமதியை காட்டி அமைதியான முறையில் கைதுசெய்து அழைத்துச் செல்ல முடியும். எனினும் இங்கு கடைப்பிடிக்கப்பட்டவை மிகவும் வருந்தத்தக்கதாகும்.

வித்தியாதரன் அழைத்துச் செல்லப்பட்டமை சரியான காரணத்திற்காகவா அன்றேல் அவ்வாறு இல்லாமலா என்பது குறித்து எமக்குத் தெரியாது. அது தொடர்பான பூரண அறிவின்றி நாம் விமர்சிக்க முடியாது.

எனினும் உண்மை யாதெனில் பொலிஸ் பேச்சாளர் முதலில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் ஆயுதபாணிகளின் குழுவொன்றினால் வெள்ளைவானில் கடத்தப்பட்டதாக தெரிவித்தார். எனினும் சிறிது நேரத்தில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதிலிருந்து இடது கை செய்வதை வலது கை அறியாத நிலையில் பொலிஸார் உள்ளனரா? என்ற தோற்றப்பாட்டை காட்டுகின்றது.

கண்ணால் கண்ட சாட்சிகளின்படி குறித்த மலர்ச்சாலையில் சுடர்ஒளி பிரதம ஆசிரியர் வித்தியாதரன் பத்திரிகை வெளியீட்டாளர் சகிதம் அவரது உறவினர் ஒருவரின் மரணச்சடங்கில் ஈடுபட்டிருந்த சமயம் பொலிஸ் சீருடையில் வந்த மூவர் பிரதம ஆசிரியரை அங்கிருந்து கூட்டிச்செல்ல முயன்றுள்ளனர். இதன்போது வித்தியாதரனும் மரணச்சடங்கில் கலந்துகொண்ட சிலரும் அதனை தடுக்க முற்பட்டவேளை சிவில் உடையில் இருந்த மேலும் மூவர் வித்தியாதரனை பலவந்தமாக வெள்ளைவானில் தூக்கிப்போட்டுச் சென்றுள்ளனர்.

இந்த விதமாக ஒருவரைக் கைது செய்வதையும் இதன்பொருட்டு வெள்ளைவானைப் பயன்படுத்துவதையும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் வெகுவாக கண்டிக்கின்றது. இது மிகவும் கவலைக்குரியதாகும்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.