இலங்கையில் யுத்தத்தை நிறுத்த ஒபாமா தமது செல்வாக்கை பயன்படுத்தவேண்டும்: ஒபாமாவுக்கான தமிழ் மக்கள்

இலங்கையில் இடம்பெறும் மோதல் சம்பவங்களை முடிவிற்கு கொண்டு வந்து நிரந்தர சமாதானம் ஒன்றை தோற்றுவிக்க உதவ வேண்டும் என அமெரிக்காவில் வாழும் ஒபாமாவுக்கான தமிழ் மக்கள் என்ற அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.


அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுக்கு அனுப்பி வைத்துள்ள ஒரு கடிதத்தில் தற்போதைய ஜனாதிபதி ஒபாமாவிற்கு இந்த விடயத்தில் அறிவுரை கூறுமாறு கேட்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இலங்கை பிரச்சினைக்கு சுமுகமான தீர்வொன்றை எட்ட முடியும் என தமிழ் சமூகம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே தாம் கிளின்டனின் ஆதரவாளர்களாக இருந்ததாகவும் தற்போது ஒபாமாவின் ஆதரவாளர்களாக செயற்படுவதாகவும் அமெரிக்க தமிழ் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்

இலங்கை அரசாங்கம் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருகிறது. அகதிகளாக வரும் மக்களை நலன்புரி முகாம்கள் என்ற போர்வையில் தடுப்பு முகாம்களில் வைத்துள்ளதாக இலங்கைத் தமிழர்கள் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

1948 ஆம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவத்தில் விடுபட்டது முதல் தமிழர்கள் இலங்கையில் அடக்கப்பட்டவர்களாகவே நடத்தப்படுகின்றனர்.

அரசாங்கம் மனித உரிமை தொடர்பான சட்டங்களை மதிக்காதமையை மனித உரிமைகள் காப்பகம், எல்லைகளற்ற ஊடகவியலாளர் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் இனப்படுகொலை தண்டனை தடுப்பு சம்மேளனம் என்பன ஏற்றுக்கொண்டுள்ளன.

இந்தநிலையில் இந்தியா இலங்கைக்கு வழங்கும் உதவிகளை நிறுத்தவேண்டும் என சோனியா காந்தியை வலியுறுத்தவும், தமது அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்காவுக்கு மாத்திரமே இலங்கையின் யுத்தத்தை நிறுத்தமுடியும் என்பதன் காரணமாகவே தாம் இந்தக்கோரிக்கையை ஒபாமாவிடம் வலியுறுத்துவதாக ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.