ஸ்டேட் பேங்க் கின் அதிரடி திட்டம் : கார் கடனுக்கு ஒரு வருடத்திற்கு 10 சதவீதம்தான் வட்டி

மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கார் கடனுக்கான வட்டியில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. அதன்படி வரும் பிப்ரவரி 23ம் தேதியில் இருந்து மே 31ம் தேதிக்குள் புதிதாக கார் கடன் வாங்குபவர்களுக்கு, ஒரு வருட காலத்திற்கு 10 சதவீதம்தான் வட்டி என்று அறிவித்திருக்கிறது.

இப்போது, கார் கடனுக்கு ஸ்டேட் பேங்க் 11.5 சதவீத வட்டியும், மற்ற பொதுத்துறை வங்கிகள் 10.25 முதல் 12.25 சதவீத வட்டியும் வசூலிக்கின்றன. மேலும் கார் கடனை அதிகபட்சமாக 84 இ.எம்.ஐ.,களாக செலுத்தலாம் என்றும் ஸ்டேட் பேங்க் சொல்லியிருக்கிறது. டிசம்பர் 2008 உடன் முடிந்த காலத்தில் கணக்கிட்டு பார்த்தபோது, ஸ்டேட் பேங்க்கில் கார் கடன் வாங்கியவர்களின் எண்ணிக்கை 32 சதவீதம் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. எனவே கார் கடனை அதிகரிக்கும் விதமாக இந்த வட்டி குறைப்பு செய்யப்பட்டிருப்பதாக எஸ்.பி.ஐ., உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மாதா மாதம் 20,000 பேருக்கு கார் கடன் கொடுக்க வேண்டும் என்று அது இலக்கு வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த சில மாதங்களாக, அதிக வட்டி காரணமாக இந்தியாவில் வீட்டு கடன் மற்றும் கார் கடன் பெறுவோர் எண்ணிக்கை குறைந்து வந்திருப்பதை அறிந்த ரிசர்வ் பேங்க், வங்கிகள் வட்டியை குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தது. கார் விற்பனையும் கடந்த வருடத்துடன் ஒப்பிட்டால் டிசம்பர் மாதத்தில் 7 சதவீதமும் ஜனவரி மாதத்தில் 3 சதவீதமும் குறைந்திருந்தது. கார் கடனுக்கு இப்போது வட்டியை குறைத்திருக்கும் ஸ்டேட் பேங்க், கடந்த ஜனவரி 31ம் தேதி, வீட்டு கடனுக்கு ஒரு வருடத்திற்கு 8 சதவீதம்தான் வட்டி என்று அறிவித்திருந்தது.

source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.