ஒசாமா மறைவிடம் கண்டுபிடிப்பு: புவியியல் அறிஞர்கள் புது தகவல்

வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த இரண்டு புவியியல் பேராசிரியர், செயற்கைக்கோள் படங்கள் மூலம், தர்க்க ரீதியாக, ஒசாமா பின் லாடன் எங்கு மறைந்திருக்கக் கூடும் என்பதை கண்டு பிடித்துள்ளனர்.அமெரிக்காவை சேர்ந்தவர் புவியியல் துறை பேராசிரியர்கள் தாமஸ் கில்லெஸ்பி மற்றும் ஜான் அக்னியு. இவர்கள், செயற்கைக் கோள் புகைப்படங்கள், புவியியல் முறைகள் மூலம், ஒசாமா பின் லாடன் மறைந்திருக்கும் இடம் எங்கே இருக்கிறது என்பதை தர்க்க ரீதியாக கண்டுபிடித்துள்ளனர்.


இவர்கள் ஆய்வின் படி, பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்பகுதியில் உள்ள பராசினார் நகரில் உள்ள மலைகளில், ஒசாமா ஒளிந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான் எல்லையில், 19 கி.மீ., தொலைவில் பராசினார் நகரம் இருக்கிறது. இந்நகரில் மூன்று சுற்றுச்சுவர்கள் கொண்ட வளாகத்தில் ஒசாமா பின் லாடன் தங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அமெரிக்காவில் செப்டம்பர் 11ம் தேதி நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து, ஒசாமா பின் லாடன் தலைமறைவானார். இதுவரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒசாமா இருப்பிடத்தை தெரிவிப்போருக்கு 12 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அமெரிக்கா அறிவித்துள்ளது.””தற்போதைய இந்த முதல் கண்டுபிடிப்பு அறிவியல் பூர்வமானது. ஒசாமா இடம் மாறினால், அமெரிக்க உளவுத்துறையின் புதிய தகவல்களின் அடிப்படையில், மறைவிடத்தை துல்லியமாக கண்டுபிடித்துவிடலாம்,” என்று, ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.தனது மறைவிடத்தில் மின்சார வசதி, பாதுகாப்பு, தனிப்பட்ட வாழ்வுக்கு பாதுகாப்பு ஆகியவற்றுடன் மிகக் குறைந்த மெய்க்காவலர்களுடன் ஒசாமா இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

சிறிய நகரங்கள் மற்றும் கிராமத்துக்கு அருகில் மறைவிடம் அமைப்பதை விட, பெரிய நகரங்களுக்கு அருகில் மறைவிடம் அமைக்கப்படுவது ராணுவத்தின் சோதனையில் கண்டுபிடிக்க முடியாமல் போகும் என்ற கணிப்பு தான், இந்த நகரை தேர்வு செய்யும் முடிவுக்கு காரணமாக, இருக்கலாம் என்று கருதப்படுகிறது.ஒசாமா தங்கியிருப்பது முன்புற வாயில் சீல் வைக்கப்பட்ட ஒரு குகையில். அங்கு கதகதப்பு வசதி, காற்று வெளியேற்றும் வசதி, மாதம் தோறும் பொருட்களை கொண்டு சேர்க்கும் வசதி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த இடத்தை விண்ணில் இருந்து எளிதில் பார்க்க முடியும்.ஆப்கானிஸ்தான் மீது சோவியத் யூனியன் 1980ம் ஆண்டுகளில் போர் தொடுத்த போது, முஜாகிதீன்களுக்கு அடைக்கலம் கொடுத்தது இந்நகரம் தான். எனவே, தற்போது, இங்கிருந்து தான் அதிக எண்ணிக்கையில் தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானுக்குள் சென்று வருகின்றனர் என்று தெரிகிறது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.