கனடாவில் தமிழ் மாணவர்கள் வீதி மறியல் போராட்டம்

கனடா ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர்கள் வீதி மறியல் கவனயீர்ப்பு போராட்டத்தினை நேற்று நடத்தியுள்ளனர்.

யோர்க் பல்கலைக்கழக முன்றலில் நேற்று புதன்கிழமை தொடங்கிய இந்த வீதி மறியல் போராட்டத்தில் பெரும் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

யோர்க் பல்கலைக்கழக முன்றலில் இருந்து பிரதான வீதியூடாக தமிழீழ தேசியக் கொடியைத் தாங்கியவாறு பேரணியாக சென்ற மாணவர்கள்

“தமிழீழ விடுதலையை அங்கீகரி”

“எம்மை யாரும் தோற்கடிக்க முடியாது”

“எமக்கு வேண்டும் தமிழீழம்”

போன்ற முழக்கங்களை எழுப்பியதோடு சன நெருக்கடி நிறைந்த வீதியினை மறித்து தமது கோரிக்கைகளை வலுவாக வெளிப்படுத்தினர்.

இதுவரை காலமும் கனடிய அரசையும் அனைத்துலக சமூகங்களையும் நோக்கி இரந்து குரல் எழும்பி வந்த கனடிய தமிழர் சமூகம் அதன் மூலம் தமிழ் மக்களுக்கு நியாயபூர்வமான பலன்கள் எதுவும் கிடைக்காத காரணத்தாலும், கனடிய மற்றும் அனைத்துலக அரசுகளின் வேண்டுதல்களை, சிறிலங்கா அரசு புறக்கணிப்பதாலும் தனித் தமிழீழமே தமிழரின் பிரச்சினைக்கு தீர்வாகும் என முழக்கமிட்டனர்.

தமிழினத்தை அழித்து, கொடிய போரை அரங்கேற்றி வரும் சிறிலங்காவின் சிங்களக் கொடியை தனது உறவுகளை பறிகொடுத்த மாணவர் ஒருவர் எரியூட்டினார்.

இது வரை காலமும் நடைபெற்ற போராட்டங்களில் முற்றிலும் வேறுபட்ட வடிவில் கனடிய தமிழ் மாணவர்களின் விடுதலை அவாவை இப்போராட்டம் வெளிக்காட்டியது.

போராட்டத்தின் இறுதியில் மீண்டும் யோர்க் பல்கலைக்கழக முன்றலில் ஒன்றுகூடிய மாணவர்கள் மத்தியில் யோர்க் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உதவித் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களில் ஒருவரும் உரையாற்றினர்.

அவர்கள் தமது உரையில்,

தமிழர்களும் மனிதர்களே எனவே அவர்களின் உரிமைகளையும் உயிர் வாழ்வுக்கான உத்தரவாதத்தையும் யாரும் தட்டிக்கழிக்க முடியாது எனக்குறிப்பிட்டனர்.

தமிழ் மாணவர்கள் சார்பில் உரையாற்றியோர் மாற்றின சமூகங்களுக்கு இன்றைய தாயக நிலமை தொடர்பான விளக்கவுரையை நிகழ்த்தினர்.

அத்தோடு, சிறிலங்கா அரசினால் புனர்வாழ்வு நிலையங்கள் என அழைக்கப்படும் நாசிப்படைகளின் கொலை முகாங்கள் போன்ற தடுப்பு மையங்களில் தமிழர்களை மூன்று வருட காலத்துக்கு அடைத்து வைக்கும் திட்டமானது தமிழ் சமூகத்தைக் கொன்றொழிப்பதற்கானதே ஆகும்.

இது இலங்கையில் தமிழர்களின் இருப்பை துடைத்தொழிப்பதையே நோக்காகக் கொண்டது எனவும் தெளிவுபடுத்தினர்.

தமிழீழ விடுதலையை முன்வைத்தும், அதனை அங்கீகரிக்கக் கோரியும் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாணவர்கள், தமிழீழத்தின் அடையாளமான தமிழீழ தேசியக் கொடியை தமது கரங்களில் தாங்கியிருந்தனர்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.