ஏவுகணைத் தாக்குதலில் 15 பாகிஸ்தானியர் பலி

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், பழங்குடியினர் வசிக்கும் பகுதியில், அமெரிக்கா மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், 15 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். பாகிஸ்தானின், வாசீரிஸ்தான் மாகாணத்தில், ஏராளமான பழங்குடியினர் வசிக்கின்றனர்.


இந்த பகுதிகள் அல்-குவைதா, தலிபான் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் மறைவிடமாக உள்ளன. ஏராளமான பயங்கரவாத முகாம்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன. இங்கு பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை குறிவைத்து, அமெரிக்கா அடிக்கடி ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் தெற்கு வாசீரிஸ்தானில், நடந்த ஏவுகணை தாக்குதலில், 32 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பாக்., கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், இங்குள்ள குர்ராம் என்ற இடத்தில் தடை செய்யப்பட்ட தெரிக்-இ-தலிபான் என்ற அமைப்பினர், கூட்டம் நடத்துவதாக அமெரிக்க ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு அமெரிக்கா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், 15 அப்பாவி மக்கள் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் காயம் அடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

அல்-குவைதா முக்கிய தலைவர் பலி: அல்-குவைதா அமைப்பின் வட ஆப்பிரிக்கா பிராந்தியத்தின் முக்கிய தலைவராக செயல்பட்டு வந்தவர் முராத் பவுசித். அல்ஜீரியாவில் தங்கியிருந்து தங்களது அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியில் அவர் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து அல்ஜீரிய ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. ராணுவத்துடன் நடந்த சண்டையில், முராத் பவுசில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.