கன்னியாகுமரி அருகே 4 உடல்களுடன் கொரிய கப்பல்: 3பேர் கவலைக்கிடம்

நாகர்கோவில் : கன்னியாகுமரி அருகே நங்கூரம் இட்டு நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் நான்கு இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. மேலும் கவலைக்கிடமான நிலையில் மூன்று பேர் உட்பட 16 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 12 நாட்டிகல் தொலைவில் ஒரு கப்பல் நங்கூரம் போட்டு நிறுத்தப்பட்டிருந்தது.


அந்த கப்பலிலில் இருந்து சிலர் உதவி கேட்டுள்ளனர். இலங்கை பிரச்னையால் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் கப்பல் பக்கம் செல்ல பயந்த மீனவர்கள் இதுபற்றி துறைமுக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் தூத்துக்குடி கடலோர காவல்படைக்கும், கன்னியாகுமரி போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். கன்னியாகுமரி போலீசார் ஒரு படகில் அந்த கப்பல் நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பிரைட் லைன் என்ற பெயருடைய அந்த கொரிய நாட்டுக்கப்பலில் சிலர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். கலெக்டர் ராஜேந்திரகுமார் உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் ரால்ப்செல்வின் தலைமையில் 15 பேர் கொண்ட மருத்துவக்குழு தனிப்படகில் அந்த கப்பலுக்கு சென்றனர். அங்கு கொரிய நாட்டை சேர்ந்த ஜோபின்பின் (23), கோவாங்குவாஸ் (28), மியான்மர் நாட்டை சேர்ந்த ஷைனியோ கட்டர் (32), சவ்டேவிட் (29) ஆகிய நான்கு பேர் இறந்து கிடந்தனர். இரண்டு கேப் டன்கள் உட்பட மூன்று பேர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

மீதமுள்ள 13 பேரும் உடல் தளர்ந்த நிலையில்காணப் பட்டதால் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் தூத்துக்குடி கடலோர காவல்படை படகு மூலம் மீட்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். கடந்த 9ம் தேதி குஜராத் மாநிலம் காண்ட்லா துறைமுகத்திலிருந்து ஒன்பதாயிரம் டன் மாட்டுத்தீவனம் ஏற்றிக் கொண்டு இந்த கப்பல் புறப்பட்டது. சிங்கப்பூர் வழியாக வரும் 28ம் தேதி கொரியா சென்றடைய திட்டமிடப்பட்டிருந்தது. வரும் வழியில் மீன் பிடித்து சமைத்து சாப்பிட்டுள்ளனர். இந்த மீனில் இருந்த விஷத்தன்மைதான் நான்கு பேரின் உயிரை பறித்துள்ளது. கப்பலில் இருந்த அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டுள்ளதால் கப்பலுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.