இன்று இடைக்கால ரயில்வே பட்ஜெட் – சலுகை மழைக்கு வாய்ப்பு

டெல்லி: ரயில்வே இடைக்கால பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இது தேர்தல் காலம் என்பதால் ஏராளமான சலுகைகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நேற்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் உரையுடன் தொடங்கியது.

வரும் ஏப்ரல் – மே மாத வாக்கில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளதால் முழுமையான பட்ஜெட்டுக்குப் பதில் இடைக்கால பட்ஜெட்டை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தயாரித்துள்ளது.

அதன்படி இன்று இடைக்கால ரயில்வே பட்ஜெட்டும், 16ம் தேதி இடைக்கால பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது.

ரயில்வே பட்ஜெட்டில் ஆண்டுக்காண்டு கட்டணத்தைக் குறைத்து வரும் லாலு, இந்த ஆண்டு தேர்தலும் சேர்ந்து வருவதால் அதிரடியாக பல சலுகைகளை அள்ளி வழங்கி அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில்வே பட்ஜெட் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் லாலு பிரசாத் கூறுகையில், இது சாமானியர்களுக்கான பட்ஜெட்டாக இருக்கும்.

ரயில்வே துறை கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்த சாதனைகளை இந்த பட்ஜெட் விரிவாக விளக்கும் என்றார் லாலு.

பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உலகையே அதிர வைத்துக் கொண்டிருக்கும் நிலையிலும், ரயில்வே துறையின் மொத்த வருமானம் இந்த நிதியாண்டின் முதல் பத்து மாதங்களில் 13.7 சதவீத உயர்வைக் கண்டுள்ளது. ரயில்வேயின் வருமானம் இந்த காலகட்டத்தில் ரூ. 64 ஆயிரத்து 876.34 கோடியாகும்.

சரக்கு வருவாய் ரூ. 38,734.12 கோடியிலிருந்து ரூ. 44,016.26 கோடியாக எகிறியுள்ளது. இது 13.64 சதவீதம் அதிகமாகும்.

பயணிகள் வருவாய் ரூ. 16,134.94 கோடியிலிருந்து ரூ. 18,042.82 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 11.82 சதவீதம் அதிகுமாம்.

சமீபத்தில் இருமுறை எரிபொருள் விலை குறைக்கப்பட்டது. வருவாயும் உயர்ந்துள்ளது. எனவே இந்த இடைக்கால ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணத்தில் பல குறைப்புகள் இருக்கலாம், சலுகைகள் நிறைய அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source & Thanks : aol.in

Leave a Reply

Your email address will not be published.