அதிக கட்டணம்: ‘வேலையைக் காட்டின’ விமான நிறுவனங்கள்!

மும்பை: அனைத்து விமான நிறுவனங்களும் அடிப்படைக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை சந்தடியில்லாமல் உயர்த்தத் தொடங்கிவிட்டன.

நேற்று முதல் ரூ.2000 வரை அடிப்படைக் கட்டணங்களை உயர்த்தியுள்ளன, அனைத்து நிறுவனங்களும். அதாவது இதுவரை ரூ.99 மட்டுமே என விளம்பரம் செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு இன்றுமுதல் ரூ.2099 ப்ளஸ் சர்சார்ஜ் (இதைவிட இருமடங்காவது வரும்!!)வசூலிக்கப்படும்.

பெட்ரோலியப் பொருட்களின் விலை தண்ணீர் விலையை விட கீழே போய் விட்டது. குறிப்பாக விமான எரிபொருளுக்கு அரசு எக்கச்சக்க வரிச் சலுகைகளை வேறு அளி்த்துள்ளது. இதன் பலன் மக்களுக்கு முழுமையாகக் கிடைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது. ஆனால் விமானக் கட்டணங்களைக் குறைக்க பல நிறுவனங்கள் பிடிவாதமாக மறுத்து வந்தன.

இந் நிலையில், மத்திய அரசின் உத்தரவு சற்று கடுமையாக இருக்கவே, வேறு வழியின் வேண்டா வெறுப்பாக கட்டணங்களைக் குறைத்து அறிவித்தன அனைத்து விமான நிறுவனங்களும்.

அதுவும் சில தினங்கள் வரைதான் நீடித்தது. அதிகபட்சம் ஒருமாதம் கூட இந்த கட்டணக் குறைப்பு அமலில் இல்லை. இப்போது மீண்டும் அவசர அவசரமாக இந்தியன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட அனைத்து விமான நிறுவனங்களும் அடிப்படைக் கட்டணத்தில் ரூ.2000 வரை உயர்த்தியுள்ளன. இந்த கட்டண உயர்வில் எல்லா நிறுவனங்களுமே ஒரு ‘கார்ட்டெல்’ போல கூட்டு சேர்ந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்குக் காரணம் கேட்டபோது, “குறைந்த கட்டணம் அறிவிக்கப்பட்டாலும் மக்களிடம் அதற்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. வழக்கம் போல் வந்து போகும் அளவுதான் பயணிகள் வரத்து உள்ளது. எனவே இப்போது சீட்களை நிரப்புவது எங்கள் பிரச்சினையில்லை. கேஷ் பாக்ஸ் நிரம்ப வேண்டும்.

அப்போதுதான் நிலைக்க முடியும். எனவே அனைத்து குறைந்த கட்டண டிக்கெட்டுகளையும் போன வாரமே நிறுத்திவிட்டோம். இனி வழக்கம் போல அதிக கட்டண டிக்கெட்டுதான். இதனால் வழக்கமாக விமானத்தில் வந்து போகும் பயணிகள் நிச்சயம் நிற்கப் போவதில்லை…”, என்று தெரிவித்துள்ளார் கிங் பிஷர் நிறுவன செய்தித் தொடர்பாளர்.

இப்படியெல்லாம் கூடவா யோசிப்பீங்க!

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.