முட்டாள்களின் கைகளில் கிழக்கு மாகாணசபை ஒப்படைக்கப்பட்டுள்ளது: கருணா தெரிவிப்பு

முட்டாள்களின் கைகளில் விடுவிக்கப்பட்ட கிழக்கு மாகாணசபை ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா தெரிவித்துள்ளார்.

இன்னும் சில வாரங்களுக்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தாம் இணையவுள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினரான விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் தற்போது பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிது புதிதாகக் கட்சிகளை ஆரம்பிப்பதனை விட தேசியக் கட்சி ஒன்றுடன் இணைந்து செயற்படுவதே சாலச் சிறந்தது எனவும், அதன் மூலம் மக்களுக்குச் சேவை செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நாம் இணைவதன் மூலம் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தி அரசாங்கத்தின் மூலம் கிழக்கில் பாரிய அபிவிருத்திப் பணிகளைச் செய்ய முடியும்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பெயரை மாற்றி அதனைச் சரியான வழிக்குக் கொண்டு வரும் எனது முயற்சியும் பயனளிக்கவில்லை.

கிழக்கு மாகாணத்தில் கல்வி மற்றும் தொழில் முயற்சிகளை அபிவிருத்தி செய்ய வேண்டியது இன்றைய அவசரத் தேவையாகவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் திருமலை மாவட்டத்திலிருந்து அம்பாறை மாவட்டம் வரையிலுள்ள எனது அனைத்து அலுவலகங்களையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளைகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலுள்ள 60 பேரைத் தவிர ஏனையோர் அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வர்.

கிழக்கு மாகாணம் என்பது புத்தி ஜீவிகள் நிறைந்த மாகாணமாகும். இதன் காரணமாக இந்த மாகாண சபையைப் புத்தி ஜீவிகள் நிறைந்த மாகாண சபையாக மாற்றியமைக்க வேண்டியுள்ளது.

கல்வியறிவு இல்லாதவர்களையும் முட்டாள்களையும் கொண்டு கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியாது. கிழக்கு மாகாணம் இந்த நிலைக்கு வருவதற்குக் காரணம் யார் என்பது சர்வதேசத்துக்குத் தெரியும்.

இன்னும் சில தினங்களில் அமைச்சுப் பொறுப்பு ஒன்று வழங்கப்பட உள்ளதாகவும், அதன் மூலம் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பினை வழங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.