பறவைகள், நாய்கள் கூட உட்புக முடியாதளவு பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் சிறிலங்காவின் 61 ஆவது சுதந்திர நாள் கொண்டாட்டம்

மக்களின் சுதந்திரமான நடமாட்டம் தடுக்கப்பட்ட நிலையிலும் மற்றும் ஆகாயத்தில் எல்லையின்றி பறக்கும் பறவைகள், தெருவோர நாய்கள் கூட உள்நுழைய முடியாதவாறு மிகவும் இறுக்கமான பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் சிறிலங்காவின் 61 ஆவது சுதந்திர நாள் நிகழ்வுகள் கொழும்பு காலிமுகத்திடலில் இன்று நடைபெற்றன.

அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த வைபவத்தில் அமைச்சர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்று சில அரசியல்வாதிகளை தவிர வேறு எவரும் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் இரண்டாம் நிலை இராஜதந்திரிகள் அல்லது தூதரக அதிகாரிகள் மாத்திரமே நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நிகழ்வினை பார்வையிட பொதுமக்கள், அமைச்சர்களின் உறவினர்கள் எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

இதேவேளை, சிறிலங்காவின் சுதந்திர நாளான இன்று புதன்கிழமை காலை முதல் கொழும்பு நகர் வெறிச்சோடி காணப்பட்டது.

விடுமுறை நாளாக இருந்தபோதும் படையினரின் தேடுதல், சோதனை கெடுபிடிகள் காரணமாக மக்கள் வெளியே செல்லவில்லை.

சுதந்திர நாள் நிகழ்வுகள் காலிமுகத்திடலில் நடைபெற்றமையினால் பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி ஊடான போக்குவரத்து மற்றும் கொம்பனித்தெரு, கொழும்பு – 07 ஆகிய பிரதேசங்கள் ஊடான போக்குவரத்துக்களும் தடை செய்யப்பட்டிருந்தன.

இதனால், இந்த பிரதேசங்களில் உள்ள டேடனஸ், நவலோகா போன்ற முக்கியமான இரண்டு மருத்துவமனைகளுக்கு நோயாளர்கள் செல்ல முடியாது அவதிப்பட்டனர்.

ஏனைய பகுதிகளில் முப்படையினரும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

மிகவும் குறைந்தளவில் சேவையில் ஈடுபட்ட பயணிகள் பேருந்துகள், வாகனங்கள் அனைத்தும் வீதிகளில் வழி மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டன.

குறிப்பிட்ட சில பயணிகள் பேருந்துகளை தவிர வெளி மாவட்டங்களில் இருந்து வேறு வாகனங்கள் எதுவும் கொழும்பு நகருக்குள் வரவில்லை.

கடந்த ஆண்டுகளிலும் சுதந்திர நாள் அன்று விடுமுறையாக இருந்தாலும் வர்த்தக நிலையங்கள் சந்தைகள் இயங்குவது வழமை.

ஆனால், இந்த ஆண்டு சகலதுமே முடங்கியிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

கோட்டை, புறக்கோட்டை ஆகிய வர்த்தக நகரங்கள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மரக்கறி வகைகள், கடல் உணவுகள் எதுவும் வெளி மாவட்டங்களில் இருந்து கொழும்பு நகருக்கு கொண்டு வரப்படவில்லை. அவற்றினை ஏற்றி வரும் பார ஊர்தி வாகனங்கள் எதுவும் இன்றைய நாள் கொழும்புக்கு நகருக்குள் வர அனுமதிக்கப்படவில்லை.

இதனால், சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. முப்படையினரும் வீதியோரங்களில் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தமையினால் வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை, மட்டக்குளிய மற்றும் தெஹிவளை கல்கிசை ஆகிய இடங்களில் காலை வேளை திறக்கப்பட்டிருந்த சில சிறிய கடைகள் கூட பின்னர் இழுத்து மூடப்பட்டன.

Source & Thanks : puthinam .com

Leave a Reply

Your email address will not be published.