தமிழ் மக்கள் நாளாந்தம் செத்து மடியும் போது சிறிலங்கா அரசை பாராட்டியிருப்பது வேதனையளிக்கிறது: அகாசியிடம் த.தே.கூ.

வன்னியில் வானூர்தி தாக்குதல்களாலும் பீரங்கித் தாக்குதல்களாலும் ஆட்லெறி எறிகணைத் தாக்குதல்களாலும் தமிழ் மக்கள் நாளாந்தம் செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர். இந்தப் படுகொலை குறித்து கண்டனம் எதுவும் தெரிவிக்காமல் சிறிலங்கா அரசாங்கத்தை பாராட்டியிருப்பது பெரும் வேதனை அளிப்பதாகவுள்ளது என ஐப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவரின் இல்லத்தில் யசூசி அகாசியை நேற்று முன்நாள் சனிக்கிழமை இரவு 7:00 மணி தொடக்கம் 10:00 மணிவரை சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்திருப்பதாவது:

வன்னியில் இன்று சிறிலங்கா இராணுவத்தினரால் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

நான்கு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இன்று போர்ச்சூழலில் சிக்கித் தவிர்க்கின்றனர். இவர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. மக்களின் ஜனநாயக சுமைகளை அரசாங்கம் அப்பட்டமாக மீறி வருகிறது. தமிழ் மக்களுக்கு அநீதி கிடைப்பதில்லை.

திருகோணமலையில் ஐந்து தமிழ் மாணவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர்.

மூதூரில் தொண்டர் நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

உலகத்தின் கவனத்தை திசை திருப்ப ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்த ஆணைக்குழுவுக்கு என்ன நடந்தது என்பது தெரியாது.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண என அனைத்து கட்சி மாநாடு கூட்டப்பட்டது. அதில் தமிழ் மக்களின் பிரதிநித்துவம் இல்லை. 13 ஆவது அரசியல் அமைப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வடக்கு-கிழக்கு கைவிடப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியும் நாங்களும் வடக்கு-கிழக்கு இணைப்புக்கு தயாராக இருந்த போதும் வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டுள்ளது.

ஒற்றை ஆட்சியின் மூலம் இனப்பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. விடுதலைப் புலிகளை இராணுவ பலத்தின் மூலம் அழித்துவிட்டு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் விடுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

பயங்கரவாதம் என்ற போர்வையில் தமிழர்களின் உரிமைக்குரலை நசுக்கி விடவே அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. இதற்காகவே அரசாங்கம் கொடூரமான போரை நடத்தி வருகின்றது.

வன்னியில் நான்கு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்புத் தொடர்பாக எதனையும் பேசாமல் பாராட்டியிருக்கின்றீர்கள். இந்த பாராட்டு உரையை அவர்கள் சாதகமாக பயன்படுத்தி இனத்தை ஒழிப்பதிலேயே ஈடுபடப் போகின்றனர் என யசூசி அகாசியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த ஐப்பானிய சிறப்புத் தூதுவர்:

இலங்கையில் தமிழ் மக்கள் உரிமைகளைப் பெற்று வாழ வேண்டும் என்பதையே ஐப்பான் அரசாங்கம் விரும்புகின்றது. இலங்கையில் மக்கள் அமைதியாக வாழ வேண்டும்.

இனப்பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள அனைத்து கட்சி மாநாட்டில் பங்குபற்றுவது முக்கியமானது எனக் கூறினார்.

அரசாங்கத்தை தான் பாராட்டவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், பத்மினி சிதம்பரநாதன், கனகசபை பத்மநாதன், சந்திரநேரு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Source & Thanks : puthinam .com

Leave a Reply

Your email address will not be published.