சமையல் காஸ் விலை குறையுமா?: அரசு முடிவில் குழப்பம்

புதுடில்லி:எதிர்பார்க்கப்படும் பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு தொடர்பான அறிவிப்பு எந்த நேரத்திலும் வரும் எனத் தெரிகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் ஐந்து ரூபாயும், ஒரு லிட்டர் டீசல் விலையில் ஒரு ரூபாயும் குறைக்கப்படும் எனத் தெரிகிறது. சமையல் காஸ் விலைக் குறைப்பில் முடிவு எடுக்கவில்லை.சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது.


இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட் டது.கடந்த மாதம் பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு முறையே ஐந்து ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டது. இந்தக் குறைப்பு போதாது, மேலும் குறைக்க வேண்டும் என உபயோகிப்பாளர்களும், வினியோகஸ்தர்களும், லாரி உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்தனர்.பார்லிமென்டிலும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. டீசல் விலையைக் குறைக்கக் கோரி லாரி உரிமையாளர்களும் ஸ்டிரைக் நடத்தினர். பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைப்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என கடந்த வாரம் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்திருந்தார்.இதையடுத்து, இது தொடர்பான அறிவிப்பு எப்போதும் வரும் என பலரும் எதிர்ப்பார்த்துக் காத்துள்ளனர். இதற்கிடையில், டீசல் விலைக் குறைப்பு பற்றி அரசு இரண்டு வாரத்திற்குள் அறிவிக்கவில்லையென்றால் நாங்கள் மீண்டும் போராட்டத்தில் குதிப்போம் என லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலை இறங்குமுகத்தில் உள்ளது. இதன் காரணமாக சில்லரை விற்பனையாளர்களுக்குச் சாதகமாகி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 9.86 ரூபாயும், டீசலுக்கு 3.48 ரூபாயும் லாபம் கிடைக்கிறது. இருப்பினும் இந்த லாபம் கைக்கு எட்டுகிறது என்றால் இல்லை. கலால் வரியாக லிட்டருக்கு ஒரு ரூபாயும், சுங்கவரி 2.5 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.கச்சா எண்ணெய் விலைக் குறைவின் பயன் பயனீட்டாளர்களுக்குப் போய் சேரும் வண்ணம் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ஐந்து ரூபாயும் டீசலுக்கு ஒரு ரூபாயும் குறைக்கப்படும் எனத் தெரிகிறது. சமையல் காஸ் சிலிண்டர் விலைக் குறைப்புக்கு எண்ணெய் நிறுவனங்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. சமையல் காஸ் சிலிண்டர் விலையை 20 ரூபாய் முதல் 22 ரூபாய் வரை குறைக்க வேண்டும் என்பது அரசியல் கட்சிகள் கோரிக்கை. மத்திய அரசு மானியம் கொடுத்த போதிலும் ஒரு சிலிண்டர் விற்பனை மூலம் 33 ரூபாய் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருவதால் அதை குறைக்க முடியாது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துவிட்டன.சமையல் காஸ் சிலிண்டர் விலைக் குறைப்பு முடிவாகாத காரணத்தால் மத்திய அரசு குறைப்பு அறிவிப்பை வெளியிட முடியாமல் இருக்கின்றன. இருப்பினும், பொதுத்தேர்தல் வர உள்ள நிலையில் ஓட்டு வங்கியை கணக்கு வைத்து காஸ் சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. கூட்டணிக் கட்சிகளும் இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருக்கின்றன.லாரி உரிமையாளர்கள் டீசல் விலையை கணிசமாகக் குறைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். மத்திய அரசு என்ன தான் அறிவித்தாலும், எதிர்ப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது.விலைக் குறைப்பு தொடர்பாக அமைச்சர் முரளி தியோரா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். விலைக் குறைப்பு தொடர்பான தாக்கீது எதுவும் இதுவரை பெட்ரோலிய அமைச்சகத்தில் இருந்து மத்திய அமைச்சரவைக்குச் சென்றடையவில்லை. இதற்கான கோப்பு வந்தவுடன் மத்திய அமைச்சரவை கூடி விவாதித்து அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.