இந்தியா எனும் இனிய உலகம்!

இந்தியாவில் உள்ள பல்வேறு இன, கலாசாரங்கள் அதனை ஓர் உலகமாகவே காட்சி அளிக்க செய்கிறது. தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து வளர்ச்சியால் தூரங்கள் குறைந்துவிட்டன. இந்தியா என்பது ஒரே கிராமம் போல் மாறிவிட்டது. ஆனால் இந்தியாவின்அடிநாதமாக விளங்குவது எது?அதன் வளர்ச்சி எதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்? “இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’ என்றார் மகாத்மா காந்தி. அவர் சொன்னது இன்றும் உண்மைதான். 70 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். 5 லட்சத்து 50 ஆயிரம் கிராமங்கள் உள்ளன. இவற்றில் ஏறத்தாழ 75 கோடிப் பேர் வசிக்கின்றனர். கிராமங்களில் விவசாயமே முக்கிய தொழில். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23 சதவீதம் பங்கு வகிக்கிறது. இந்தியா முன்னேற வேண்டுமானால் இந்த கிராமங்கள் முன்னேறியாக வேண்டும்.


பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்குமுன்பு இந்தியா மிகவும் வளமாக இருந்ததாக தரம்பால் போன்ற இந்திய அறிஞர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். அப்போது கிராமங்கள் மிகவும் செல்வாக்குடன் இருந்தன. சுயதேவையை பூர்த்தி செய்து கொள்பவையாக இருந்தன. கிராம வாழ்க்கைஅற்புதமாக இருந்ததால் இந்தியதேசமே பொருளாதார வலிமையுடன் விளங்கியது. 500 ஆண்டுகளுக்கு முன்பு அந்த காலத்துக்கு ஏற்ப இந்தியாவிலிருந்த வாழ்க்கை முறை தற்போதுள்ள பெரிய நாடுகளில் இருந்த தரத்தைவிட நன்றாகவே இருந்தது என்கிறார்கள் அறிஞர்கள்.பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின் போது நம் கிராமங்கள் சுரண்டப்பட்டு வளங்களை இழந்தோம். அப்போது நம் மக்கள் இழந்த அந்த வாழ்க்கை முறை இந்த 60வது குடியரசு தினத்தில் ஓரளவுக்கு நாம் பெற்றிருக்கிறோம். என்றாலும் நாம் இன்னும் அதிக தூரம் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது.

மருத்துவ அறிஞர்கள், வானியல்நிபுணர்கள், ஜோதிடர்கள், ஜவுளி தொழில் புரிவோர் உள்ளிட்டோர் மிகச்சிறப்பாக அந்த காலத்தில் இருந்தனர். பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில்தான் உழைப்பவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஊதியத்தை குறைக்கத் தொடங்கினர்.இந்தியாவில் இருந்த ஜாதியை மக்களுக்கு எதிராகவும் மன்னர்களுக்கு எதிராகவும் திசை திருப்பச் செய்தவர்கள் பிரிட்டிஷார்தான். ஒவ்வொரு மன்னரின் நிலப்பரப்பை அபகரிக்க அவர்கள் ஜாதி பிரச்னையைஉருவாக்கினார்கள். இதனால் மக்களிடையே ஏற்பட்ட அமைதியின்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள் வளர்த்த ஜாதி உணர்வுதான் இந்தியாவை விட்டு அவர்கள் வெளியேறிய பின்னரும் இன்றும் நம் நாட்டில் பிரச்னைகளுக்கும் வன்முறைகளுக்கும் காரணமாக அமைந்துள்ளன. இந்தியாவில் உள்ளூர் மக்கள் இணைந்து வாழ்ந்த வாழ்க்கை முறைதான் ஜாதி என்று அழைக்கப்பட்டது. இது பிரிட்டனில் அல்லது அமெரிக்காவில் இருந்த அடிமை முறையிலான வாழ்க்கை முறையை போன்றோ அல்லது தனிமைப்படுத்தும் வகையிலோ அமையவில்லை.

1600களில் பிரிட்டிஷாரின் வருகைக்குப் பின்னர்தான் அவர்கள் தங்கள் சுயநலத்துக்கு இந்த அமைப்பை தவறாக தூண்டிவிட்டனர்.ஜாதி அடிப்படையில் பிரிட்டிஷார் மேற்கொண்ட பொருளாதாரக் கொள்கைகள்தான் பிற்பட்ட பிரிவினர் உருவானதன் துவக்கம். பீகாரில் பிரிட்டிஷாரை எதிர்த்த மலைஜாதியினர் படை பல வலிமைமிக்க பிரிட்டிஷாரிடம் தாக்குப்பிடிக்காமல் தங்கள் செல்வங்களை இழந்தனர். அவர்கள் நலிவுற்றனர். பின்னடைவை சந்தித்தனர். 1804ம் ஆண்டின் நிலவரப்படியே இந்தியாவிலிருந்த விவசாய சாகுபடி பிரிட்டனில் நடந்த சாகுபடியை விட அதிகம். ஆகவே இங்கு விளைந்த பொருட்கள் பிரிட்டிஷாரால்அபகரிக்கப்பட்டன. இந்தியாவில் உருவாக்கப்பட்ட உருக்கு மிகச்சிறப்பான தரத்துடன் இருந்ததாக பிரிட்டிஷ் அறிஞர்களே அப்போது ஒப்புக் கொண்டனர். பிரிட்டிஷாரின் அறுவைசிகிச்சை கருவிகள் இந்திய உருக்கில்தான் தயாரிக்கப்பட்டன. 1790களில் இந்தியாவில் கடைபிடிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை விளைவாகவே பிரிட்டிஷார் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையைகண்டறிந்தனர்.

1750ம் ஆண்டுகளில் இந்தியாவும் சீனாவும்தான் உலகின் தொழிற்சாலை தேவையில் 73 சதவீதத்தை உற்பத்தி செய்தன. 1810களில் சில மாவட்டங்களில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையான தறிகள் இருந்தன. அப்போது ஏறத்தாழ 20 லட்சம் நெசவாளர்கள் இருந்தனர். பிரிட்டிஷாரின் ஜவுளிகளை விற்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் படி 1820களில் இந்திய ஜவுளித்துறை முடமாக்கப்பட்டது.1763ம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள பூர்வீக குடிகளை அழிக்க பிரிட்டிஷார் பெரியம்மையை செயற்கையாகப் பரப்பியது. அதுதான் உலகம் முழுவதும் பரவுவதற்கு காரணமாக அமைந்தது என்று குற்றஞ்சாட்டுவோர் உண்டு. இன்று உயிரி-ஆயுதங்கள் பற்றி பேசுகிறோம். ஆனால் அன்றே அதை செயல்படுத்தியவர்கள் பிரிட்டிஷார்.

இந்த குடியரசு தினத்தில் நாம் விவசாயம், கல்வியை மேம்படுத்த வேண்டும். புத்த சமயத்தை தழுவிய நாடுகளான தென் கிழக்கு ஆசியா நாடுகளுடன்தான் நம்முடைய உறவை, மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக வளர்த்துக் கொள்ள வேண்டும். நம் சுயமரியாதை, துணிவு, கூட்டு வாழ்க்கை மற்றும் ஒட்டுமொத்த சுதந்திரம் ஆகியவற்றை நாம் சுவாசிக்க வேண்டும்.- நமது சிறப்பு நிருபர் –

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.