உடுமலை தோட்டங்களில் கொத்தடிமை சிறுவர்கள் : அமலாக்க அதிகாரிகள் ‘ரெய்டு’

குடிமங்கலம் : உடுமலை அருகிலுள்ள விவசாயத் தோட்டங்களில் குழந்தை தொழிலாளர்களை கொத்தடிமைகளாக வைத்திருக்கும் தகவல் அறிந்து கோவை மாவட்ட அமலாக்க குழுவினர் நேற்று திடீர் ரெய்டு நடத்தினர். இது தெரிந்ததும் தோட்டங்களில் இருந்த பல குழந்தைகள் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.


உடுமலை அருகிலுள்ள பூளவாடி மற்றும் சுற்றுப்பகுதி தோட்டங்களில் பிற மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தை தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக “கோவை கிளாஸ்’ அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் ரகசிய சர்வே மேற்கொண்டதில் பூளவாடியைச் சேர்ந்த எட்டு விவசாயத் தோட்டங்களில் 16 குழந்தைகள் கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. வேலூர், திருப்பத்தூர் பகுதிகளைச் சேர்ந்த இந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கி குழந்தைகளை அழைத்து வந்து கடும் வேலைகளில் ஈடுபடுத்தியதை கண்டறிந்த அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் அளித்தனர். குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு திட்டத்தின் கீழ் இயங்கும் மாவட்ட அமலாக்க பிரிவினர் அப்பகுதியில் “ரெய்டு’ நடத்த, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து, கோவை கிளாஸ் கள அலுவலர்கள் கதிர்வேல், தமிழ்செல்வன், தொழிலாளர் நல வாரிய உதவி ஆய்வாளர் ராமசாமி, வருவாய் ஆய்வாளர் வெங்கடலட்சுமி, வி.ஏ.ஒ., வரதராஜ், போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று ரெய்டு நடத்தினர். பூளவாடியில் இருந்து உப்பாறு ஓடை செல்லும் ரோட்டிலுள்ள தோட்டத்துக்கு இக்குழுவினர் சென்றபோது அங்கிருந்த இரண்டு கொத்தடிமை குழந்தைகள் அதிகாரிகளைக் கண்டதும் தப்பியோடினர். அருகில் உள்ள மக்காச்சோள நிலத்துக்குள் புகுந்த இரண்டு குழந்தைகளும் மாயமாகினர். இத்தகவல், அருகில் உள்ள தோட்டங்களுக்கும் வேகமாக பரவியது.

பூளவாடி கடைகளில் பணிபுரியும் குழந்தைகளை கண்டறிய அப்பகுதியைச் சேர்ந்த இருவரை மட்டும் அதிகாரிகள் அனுப்பிவைத்தனர். அவர்கள் அளித்த தகவல்படி, பூளவாடியில் ஒரு பேக்கரியில் கொத்தடிமை குழந்தை வேலை பார்ப்பது தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு குழுவினர் சென்றபோது கடை உரிமையாளர் அவனை பேக்கரிக்குள் வைத்து பூட்டியிருந்தது தெரியவந்தது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது முத்துராஜ் பல மாதங்களாக பேக்கரியில் வேலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. குழந்தையை மீட்ட அதிகாரிகள், கடை உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்தனர்; குழந்தையை மீட்டு கோவை அன்பு இல்லத்துக்கு அழைத்து சென்றனர். பூளவாடியில் இயங்கி வரும் மட்டை மில்களிலும் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.