5000 பேரை வேலையிலிருந்து தூக்கும் மைக்ரோசாப்ட்

வாஷிங்டன்: அடுத்த ஒன்றரை வருடங்களில் 5000 பேரை வேலையிலிருந்து நீக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது அதன் பணியாளர்கள் எண்ணிக்கையில் 5 சதவீதம் ஆகும். மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட்டும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தடுமாறுவதையே இது காட்டுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

1975ம் ஆண்டு பிறந்தது மைக்ரோசாப்ட். அதன் பின்னர் இப்போதுதான் முதல் முறையாக ஆட்களை வேலையிலிருந்து நீக்குகிறது இந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது நிறுவனத்தைச் சேர்ந்த 5000 பேரை வேலையிலிருந்து நீக்கும் அறிவிப்பை நேற்று மைக்ரோசாப்ட் வெளியிட்டது.

இந்த காலாண்டில் எதிர்பார்த்த அளவு லாபம் வராததால் இந்த முடிவை மைக்ரோசாப்ட் எடுத்துள்ளது.

லாபம் குறைந்ததால் மைக்ரோசாப்ட் பங்கு மதிப்பும் நேற்று 8.5 சதவீதம் குறைந்துள்ளது. 2008 டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்த இரண்டாவது காலாண்டில், அந் நிறுவனத்தின் லாபம் 4.17 பில்லியன் டாலர்கள். அதாவது பங்கு ஒன்றுக்கு 47 சென்ட் ஈட்டியுள்ளது.

ஆனால் கடந்த வருடத்தில் இதே காலாண்டில் இந்நிறுவனம் பங்கு ஒன்றுக்கு 50 சென்ட் அதாவது 4.71 பில்லியன் டாலர்கள் ஈட்டியிருந்தது.

நிறுவனத்தின் மொத்த வருமானமும் 16.63 பில்லியன் டாலராகக் குறைந்திருக்கிறது. வருமானம் மற்றும் லாபம் குறைந்து போனதை அடுத்து இந்த முடிவுக்கு மைக்ரோசாப்ட் வந்துள்ளது.

இதற்கிடையே, தனது ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயலதிகாரி ஸ்டீவ் பால்மர் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், பொருளாதார ஏற்றத் தாழ்வு மைக்ரோசாப்ட்டையும் பாதித்துள்ளது. வாடிக்கையாளர்களும், வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக கம்ப்யூட்டர்களை அனுப்புவது பாதிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப செலவுகளும் அதிகரித்து விட்டன.

இந்த கால் ஆண்டுக்கான செலவுகளில் 600 மில்லியன் டாலர் குறைக்கப்பட்டும் கூட நிலைமையை சமாளிப்பது சிரமமாக உள்ளது.

தற்போது 5000 பேரை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் 1400 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆய்வு, வளர்ச்சி, மார்க்கெட்டிங், விற்பனை, நிதி, சட்டம், நிறுவன விவகாரங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்படும் ஆபத்தும் உள்ளது.

புதிதாக ஆட்களை எடுப்பதை முழுமையாக நிறுத்த நாங்கள் முடிவு செய்யவில்லை. முக்கிய துறைகளுக்குத் தேவையானவர்கள் படிப்படியாக எடுக்கப்படுவார்கள் என்று பால்மர் கூறியுள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகளிலேயே விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் அதன் சாப்ட்வேர்கள்தான் அதிக லாபத்தைத் தரும் பொருளாக உள்ளது. ஆனால் இந்தப் பிரிவில்தான் தற்போது கடும் விற்பனை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம்.

ஆனாலும் இந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவில் எந்த பணி நீக்கமும் இப்போதைக்கு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.