2020ல் நிலவில் கால் பதிப்பான் இந்தியன் : விஞ்ஞானி அண்ணாதுரை நம்பிக்கை

சேலம் : “”வரும் 2020ம் ஆண்டில் நிலவில் இந்தியன் கால் பதித்து, நமது மூவர்ணக் கொடியை அங்கு ஏற்றி வைப்பான்,” என, சந்திரயான் திட்ட இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.


சேலத்தில் நேற்று நடந்த ரோட்டரி சங்க “உத்சவ்’ மாநாட்டில் பங்கேற்ற மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களிடம் கூறியதாவது: நிலவுக்கு அனுப்பியுள்ள சந்திரயான் -1 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள 10 சாதனங்களில் இருந்து தகவல்கள் வருகின்றன. இந்த தகவல்களை சேகரித்து சோதனை செய்ய 10 குழுக்கள் உள்ளன. அந்த குழுவினர், வரும் 29ல் பெங்களூரில் கூடி ஆலோசனை மேற்கொள்கிறோம். அப்போது சந்திரயான் -1 விண்கலத்தில் இருந்து வந்த தகவல்கள், நாட்டில் உள்ள இயற்கை வளங்களின் தன்மை, அவற்றை பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து, பின் அவற்றை வெளியிடுவோம்.

“இஸ்ரோ’வில் இருந்து மாணவர்கள் பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு சென்ற காலம் படிப்படியாக மாறி, சந்திரயான் விண்கலம் அனுப்பப்பட்ட பின், வெளிநாட்டு மாணவர்களும் இங்கு வந்து பயிற்சி பெரும் அளவுக்கு முன்னேற்றம் கண்டு உள்ளோம். சந்திரயான் -2 விண்கலம் வரும் 2011- 2012ம் ஆண்டில் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். அதை தொடர்ந்து மூன்று ஆண்டுக்கு பின் சந்திரயான் -3 விண்கலம் அனுப்பி வைக்கப்படும். ரோபோ ஒன்றை நிலவுக்கு அனுப்பி, அங்குள்ள பொருட்களை எடுத்து வருவதற்கான முயற்சியும் துவங்கியுள்ளது. வரும் 2020ல் நிலவில் இந்தியாவின் மனிதன் கால்பதித்து மூவர்ணக் கொடியை ஏற்றுவான் என்பது என் நம்பிக்கை மட்டுமின்றி நாட்டு மக்களின் விருப்பம். இந்தியா, வரும் 2020ல் விண்வெளித் துறையில் மட்டுமின்றி அனைத்து துறையிலும் முதலிடம் பெறும் என்று நம்புகிறேன். இவ்வாறு விஞ்ஞானி அண்ணாதுரை கூறினார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.