பிரபாகரன் வெளிநாட்டிற்கு தப்பி ஓடாமல் முற்றுகை! முல்லைத் தீவை சுற்றி வளைத்தது கடற்படை (12.01.2009) செய்திகள்.

கொழும்பு: விடுதலைப் புலிகளின் கடைசிக் கோட்டையான முல்லைத் தீவை கைப்பற்ற ராணுவத்தினர் வேகமாக முன்னேறி வரும் நிலையில், புலித் தலைவர் பிரபாகரன் தப்பி ஓடி விடலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. அதனால், இலங்கை கடற்படையினர் மிகுந்த உஷார் நிலையில் உள்ளனர். கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பை முடுக்கி விட்டு முற்றுகை மேற்கொண்டுள்ளனர்.விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநகரமாக இருந்த கிளிநொச்சியை கைப்பற்றிய இலங்கை ராணுவத்தினர், அடுத்ததாக ஆனையிறவையும் பிடித்தனர். புலிகளிடம் இருந்து கைப்பற்றிய பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள ராணுவத்தினர், அங்கு ஆயுதங்கள் மற்றும் கண்ணிவெடிகளை கண்டுபிடித்து அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனையிறவை கைப்பற்றியதால் யாழ்ப்பாணத்திற்கான நெடுஞ்சாலைப் போக்குவரத்து வசதியாகும் என்பதால், இது ராணுவத்திற்கு பெரும் வெற்றியாக கருதப்படுகிறது. அடுத்தாக, முல்லைத் தீவை கைப்பற்றுவதும் எளிது என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர். இறுதிக் கட்டத் தாக்குதலுக்கும் தயாராகி வருகின்றனர்.புலிகளின் கோட்டையான முல்லைத் தீவை கைப்பற்ற இலங்கை ராணுவத்தினர் முன்னேறி வரும் நிலையில், புலித் தலைவர் பிரபாகரன் கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு தப்பி ஓடலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. இதனால், கடற்படையினர் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என, இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இலங்கை கடலோரப் பகுதிகளில் கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக இலங்கை ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

புலித் தலைவர் பிரபாகரனும், அந்த அமைப்பின் மற்ற மூத்த தலைவர்களும் நாட்டை விட்டு தப்பிவிடலாம் என, நம்புகிறோம். அதனால், கடற்படையினரை உஷார் படுத்தியுள்ளோம். முல்லைத் தீவின் வடபகுதியில், கடற்படையினர் தடை ஏற்படுத்தியுள்ளனர். முல்லைத் தீவு கடலோரப் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.மிக வேகமாகச் சென்று தாக்குதல் நடத்தும் கப்பல்கள், விரைவுப் படகுகள், ரேடார்கள் மற்றும் இதர உபகரணங்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம். முல்லைத் தீவை ஒட்டிய கடல் பகுதியில் 25 கடல் மைல் தொலைவிற்கு, நான்கு அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முற்றுகை வளையத்தைத் தாண்டி எளிதில் தப்ப முடியாது.

இவ்வாறு ராணுவ உயர் அதிகாரி கூறினார்.

இலங்கை கடற்படை தகவல் தொடர்பாளர் தசநாயகே கூறுகையில், “புலித் தலைவர் பிரபாகரன், தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நாட்டை விட்டு ஓடலாம். அதனால், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.இம்மாத முற்பகுதியில் நிருபர்களிடம் பேசிய இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா, “54 வயதான புலித் தலைவர் பிரபாகரன், கடலோர நகரமான முல்லைத் தீவில் பதுங்கியுள்ளார். தற்போது சண்டை நடக்கும் பகுதியில் இருந்து 30 கி.மீ., தொலைவில் அவர் ஒளிந்துள்ளார். 30 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள “ஏசி’ வசதி செய்யப்பட்ட பதுங்குக் குழியில் அவர் தங்கியுள்ளார். இரவில் மட்டுமே வெளியே வருகிறார். பதுங்குக் குழிக்கு தேவையான மின்சாரம் கிடைக்க சக்தி வாய்ந்த ஜெனரேட்டர்கள் உள்ளன’ என, தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானங்கள் குண்டுவீச்சு : புலிகளின் படகு அழிப்பு: விடுதலைப் புலிகளுடன் சென்ற படகை இலங்கை போர் விமானங்கள் நேற்று குண்டு வீசி தகர்த்தன. அதே நேரத்தில், மற்ற பகுதியில் ராணுவத்தினர் நடத்திய சண்டையில் ஐந்து புலிகள் கொல்லப்பட்டனர். புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றும் பிடிபட்டது.யாழ்ப்பாணத்தில் சுண்டிகுளம் பகுதியில் புலிகளின் படகு தகர்க்கப்பட்டது. இதிலிருந்த ஏராளமான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். இதற்கிடையில், வடக்கச்சி மற்றும் கந்தவெளி பகுதிகளில் ராணுவத்தினர் நடத்திய சண்டையில் புலிகள் ஐந்து பேர் பலியாகினர்.

அத்துடன் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டன. மேலும், முல்லைத் தீவில் அய்யம்பெருமாள் என்ற இடத்தில் உள்ள புலிகளின் பயிற்சி முகாமையும் நேற்று முன்தினம் மதியம் ராணுவத்தினர் பிடித்தனர். முல்லைத் தீவில் முள்ளியவளையில் நடந்த சண்டையில் இரு தரப்பிருக்கும் கடும் சேதம் ஏற்பட்டது. கற்சிலை மடு, தட்டைமலை உட்பட வேறு சில பகுதிகளிலும் நேற்று சண்டை நடந்தது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.