ஐக்கிய தேசியக் கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்கப் போவதில்லை என அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்கப் போவதில்லை எனக் கூறி அமர்வில் இருந்து வெளியேறியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியினால் சமர்பிக்கப்பட்ட அரசாங்கத்திற்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை நடத்தும் தினத்தை நிர்ணயிப்பது தொடர்பில் நாடாளுமன்றில் இன்று குழப்பநிலை ஏற்பட்டது.

இந்த பிரேரணை தொடர்பான விவாதத்தை நாளை முதல் நடத்தப் போவதாக ஆளுங் கட்சியின் பிரதான அமைப்பாளர் நிமால் சிறிபால டி சில்வா சபையில் அறிவித்தார். இந்த விவாதத்தை நள்ளிரவு வரை நடத்துவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் இதற்கு ஆட்சேபனை தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோசப் மைக்கல் பெரேரா , நாளைய தினத்தில் இருந்து விவாதத்தை நடத்துவதற்கு தமது கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

தமது கட்சியைப் பொறுத்தவரை அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் ஜனநாயகத்திற்கு இடமில்லை என்ற நிலை ஏற்பட்டிருப்பதாகவும் ஜோசப் மைக்கல் பெரேரா குற்றஞ்சுமத்தினார். இந்த நிலையில் தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போதிருந்து நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.