புலிகளுக்கு எதிரான படை நடவடிக்கைகள் கிளிநொச்சியிலிருந்தே மேற்கொள்ளப்படும் – இராணுவ வட்டாரங்கள் தகவல

கிளிநொச்சியை கைப்பற்றிய படையினர் யுத்த தாங்கிகள், ஹெலிகொப்டர்கள், பீரங்கிகளின் உதவியுடன் புலிகளின் பிடியிலுள்ள முல்லைத்தீவு பிரதேசத்தை நோக்கி நகர்வதாக படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து படையினரின் மனோ நிலை வலுவடைந்துள்ளதாகவும் கிளிநொச்சி கிழக்கில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் பாரிய சேதத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளதாகவும் அரசாங்க ஊடக அறிக்கையொன்று கூறுகின்றது.

கடந்த சனிக்கிழமையன்று கிளிநொச்சிப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் இனிமேல் புலிகளின் அரசியல் தலைமையகமாக விளங்கிய கிளிநொச்சியிலிருந்தே மேற்கொள்ளப்படுமென படைத் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஒட்டு சுட்டான் பகுதியையும் தம்வசப்படுத்தியுள்ள படையினர் புலிகளின் இறுதிப் பிடியிலுள்ள முல்லைத்தீவை நோக்கி நகர ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், ஆனையிறவையும் விரைவில் படையினர் கைப்பற்றிவிடுவார்கள் என படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, முல்லைத்தீவை நோக்கி நகரும் படையினரை எதிர்த்து புலிகள் கடுமையாக மோதி வருவதாகவும், இந்த மோதலில் 53 படையினர் பலியானதுடன் 80 பேர் காயமடைந்துள்ளதாகவும் தமிழ் நெட் இணைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, படையினர் இருவரின் சடலங்களை மீட்டுள்ளதாகவும் தமிழ் நெட் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இதனை மறுத்துள்ள படை வட்டாரங்கள் புலிகளின் பன்னிரண்டு சடலங்களை தாங்கள் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.