கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் சின்னாபின்னமான தமிழ் குடும்பத்தின் கதை

கிளிநோச்சி மாவட்டம் கல்லாறு பகுதியில் கடந்த 29 ஆம் தேதி அதிகாலை நடந்த விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில், 28 வயதான நெல்லையா புஷ்பவள்ளின் குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இவரது தந்தை குண்டு வீச்சில் இறந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியான புஷ்பவள்ளியின் கருப்பையில் இருந்த சிசுவும் இறந்துவிட்டது. இவரின் தாய் ஒரு கையை இழந்தார்.

மேலும் இவரின் மூன்று குழந்தைகளும் காயமடைந்துள்ளனர். இதில் குறிப்பாக இவரின் இரண்டாவது மகனின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஏழுவயதான மதியழகன் தனது வயற்றுக்கு கீழுள்ள பகுதிகளில் உணர்ச்சியை இழந்துள்ளார்.

இவரின் நிலை மீண்டும் வழமைபோல் திரும்ப வாய்ப்பில்லை என்று அவர் தற்போது சிகிச்சை பெற்று வரும் தருமபுரம் மருத்துவமனையின் மருத்துவர் பிரைட்டன் கூறுகிறார்.

தன்னால் சாப்பிட முடியவில்லை, படுக்கையில் புரண்டு படுக்க முடியவில்லை என்று மதியழகன் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்துள்ளார்.

புஷ்பவள்ளியின் கணவர் அவரை கைவிட்டு விட்டுச் சென்று விட்டார். அவரின் வீடும் தாக்குதலில் நாசமாகிவிட்டது. தற்போது போக்கிடமின்றி தருமபுரம் மருத்துவமனையில் இருப்பதாக பிபிசி தமிழோசை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.