வன்னியில் மக்களை மனிதக் கேடயமாக புலிகள் பயன்படுத்துவதாகக் கூறுவது உண்மையல்ல

விடுதலைப் புலிகள் மக்களை மனித்கேடயமாகவும் பகடைக்காய்களாகவும் பயன்படுத்துவதாக் கூறுவதெல்லாம் தவறானதென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் கண்காணிப்பு அமைச்சின் அறிக்கை தொடர்பாக நேற்று திங்கட்கிழமை பி.பி.சி. செய்தி சேவைக்கு இந்தியாவிலிருந்து அளித்த போட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அந்தப்போட்டியில் அவர் மேலும் கூறுகையில்; மனித உரிமைகள் அமைப்புகள்போல் பல தடவைகள் பல நிறுவனங்கள் குற்றஞ் சாட்டியிருந்தாலும் வன்னிப் பகுதி மக்கள் எக்காரணங் கொண்டும் அங்கிருந்து வெளியேறி இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வருவதற்குத் தயாரில்லை. இதுதான் உண்மை.

புலிகள் மக்களை மனிதக்கேடயமாக, பகடைக்காய்களாக வைத்திருக்கிறார்களென்று கூறுவதெல்லாம் உண்மைக்குப்புறம்பானது. யாழ்ப்பாணக்குடா நாட்டிலிருந்து சர்வதேச மத்தியஸ்தத்துடன் பொதுமக்களை வெளியேற இலங்கை அரசு அனுமதிக்கத் தயாரா எனக் கேட்க விரும்புகிறோம் ஏன், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து மக்களை வெளியேற அனுமதித்தால் சர்வதேச கண்காணிப்பிலேயே எல்லா மக்களும் தமிழகத்துக்கும் சென்று விடுவார்கள்.

புலிகள் பலவந்தமாக ஆட்களை படைக்குச் சேர்க்கின்றார்கள் என்பது உண்மையானதல்ல. போரின் கொடுமை காரணமாக இளைஞர்களும் யுவதிகளும் படைக்கு சேர்ந்து கொள்கின்றார்கள். இதை சர்வதேசம் புரிந்து கொள்ளவேண்டும். வன்னியிலிருந்து வெளியேறவிடாது மக்கள் தடுக்கப்படுகின்றனரென ஒரு சில குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருந்தாலும் கூட ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களில் பெரும்பாலானோர் யுத்தத்தை விரும்பவில்லை. ஆனால், அவர்கள் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரவிரும்பவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.