மகேஸ்வரன் எம்.பி. படுகொலை வழக்கு:எதிரிக்கு பிணை வழங்குவதற்குகொழும்பு மேல் நீதிமன்றம் மறுப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தி. மகேஸ்வரன் படுகொலை வழக்கின் பிரதான எதிரியை பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. மகேஸ்வரன் எம்.பி.யின் படுகொலை வழக்கு விசாரணை, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று ஆரம்பமானது. வழக்கு விசாரணையின் போது பிரதான எதிரியான ஜோன் ஸ்ரன் கொலின் வெலன்ரைன் மன்றில் ஆஜராக்கப்பட்டிருந்தார்.

படுகொலை சம்பவத்தினை நேரில் கண்ட சாட்சிகளான நித்தியானந்தன், மகேஸ்வரன் எம்.பி.யின் மெய்ப்பாதுகாப்பாளரான பொலிஸ் சார்ஜன்ட் தர்மசிறி மற்றும் பொன்னம்பலவாணேசரர் ஆலயத்தின் குருக்கள் பஞ்சாட்சர ஐயர் குருவாயூரன், சம்பவத்தின்போது காயமடைந்த மகேஸ்வரன் எம்.பி.யை வைத்தியசாலையில் அனுமதித்த செல்லத்துரை பரம்சோதிநாதன் ஆகிய நான்கு சாட்சிகளும் மன்றில் ஆஜராகியிருந்தனர்..

விசாரணையின் போது எதிரியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி க. ஜெயக்குமார், எதிரியை பிணையில் விடுதலை செய்யவேண்டும் என்று நீதிபதியிடம் கோரிக்கை விடுத்ததுடன் அது தொடர்பான மனு ஒன்றினையும் சமர்ப்பித்தார்..

எதிரியை பிணையில் செல்ல அனுமதிக்கும் பட்சத்தில் அவர் மீண்டும் நீதிமன்றத்துக்கு ஆஜராவது சந்தேகமே எனவும் அதனால் அவரது பிணை மனுவினை நிராகரிக்குமாறு மன்றில் ஆஜரான அரச சட்டவாதி ஜனக பண்டார வாதிட்டார்..

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கு பாரதூரமான படுகொலை சம்பந்தப்பட்டது என்பதனால் எதிரியை பிணையில் விடுவிக்க முடியாது என மறுப்பு தெரிவித்து பிணை மனுக்கோரிக்கையினை நிராரித்தார்..

அத்துடன், குறித்த வழக்கினை யூரி சபையினரின் முன்னிலையிலா அல்லது நீதிபதி முன்னிலையிலா விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி, எதிரியிடம் வினவினார். இதன்போது தமிழ் பேசும் யூரி சபையினர் முன்னிலையில் வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்று எதிரி கோரிக்கை விடுத்ததையடுத்து அதற்கு இணங்கிய நீதிபதி, தமிழ் பேசும் யூரி சபையினர் முன்னிலையில் வழக்கு விசாரணை இடம்பெறும் என அறிவித்தார்..

வழக்கு விசாரணை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக நடைபெறும் என்றும் நீதிபதி தெரிவித்து வழக்கினை ஒத்திவைத்தார். பிணை மனு மறுக்கப்பட்டதையடுத்து பிரதான எதிரி, சிறைக் காவலர்களால் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published.