முதல்வர் கருணாநிதி ரம்ஜான் வாழ்த்து: கல்வி, தொழில் வளம் பெருகட்டும்

தமிழக முதல்வர் கருணாநிதி புனித ரமலான் வாழ்த்துச்செய்தியில் “கல்வி, தொழில் வளம்” பெருகட்டும் என்று கூறியுள்ளார்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

ஒரு மாத காலம் பசியின் வலிமையை அனுபவித்தால் உணர்ந்து, உடலையும் உள்ளத்தையும் வருத்திக்கொண்டு கடுமையான நோன்புக் கடமையை நிறைவேற்றிய மன நிறைவுடன் ரம்ஜான் திருநாளை கொண்டாடும் முஸ்லிம் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் என் இதயம் கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துகள்.

மக்களிடம் நபிகள் நாயகம், “நீங்கள் ஒருவருக்கொருவர் துண்டித்து வாழாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபப்படாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். சகோதரர்களாக இருங்கள்” என்று கூறி, மனிதர்கள் அனைவரும் அன்புடன் வாழ வேண்டும் என்று வழிகாட்டினார்கள். அவரது அருள்மொழியை பின்பற்றி அறவழியில் வாழும் இஸ்லாமிய சமுதாய மக்களின் நல்வாழ்வு கருதி இந்த அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது.

மிலாது நபிக்கு அரசு விடுமுறை, உருது பேசும் முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சலுகை, சென்னை அண்ணா சாலை அரசு மகளிர் கல்லூரிக்கு “காயிதே மில்லத்” பெயர் சூட்டியது, சிறுபான்மையினர் ஆணையம், நல இயக்ககம், உலமா மற்றும் பணியாளர் நல வாரியம் அமைத்தது, ஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கையை 2000-ல் இருந்து 2400 ஆக அதிகரித்தது, மாத ஓய்வூதியம் ரூ.500-ல் இருந்து 750 ஆக உயர்த்தியது, தர்க்காக்களில் பணிபுரியும் மஜாவர்களுக்கும் “உலமா ஓய்வூதிய திட்டத்தை” நீட்டித்தது, உருது அகடமி தொடங்கியது, காயிதே மில்லத் மணிமண்டபம், உமறுப்புலவர் மணிமண்டபம் கட்டியது, முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கியது என பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த இனிய சூழ்நிலையில், இஸ்லாமிய சகோதரர்கள் அனைவர் வாழ்விலும் கல்வியும் தொழில் வளமும் செல்வமும் பெருகி என்றும் இன்புற்று வாழ இதயம் கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழக கவர்னர் பர்னாலா, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்களும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தனர்.

Source & Thanks : .newindianews

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil