ஆந்திர முதல்வர் பதவியில் அவரது புதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி? : பலர் ஆதரவு

ஆந்திர முதல்வர் பதவியை அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வழங்க இடைக்கால முதல்வர் ரோசய்யா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.

கடப்பா எம்.பியாக தற்போது ஜெகன்மோகன் ரெட்டி உள்ளார். இவரையே அடுத்த முதல்வராக நியமிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமைக்கு கோரிக்கை விடுத்து இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுதான் ராஜசேகர ரெட்டிக்கு செலுத்தும் சரியான அஞ்சலியாக இருக்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சரும், ரெட்டியின் தீவிர ஆதரவாளருமான நாகேந்தர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக 100க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த எம்.எல்.ஏக்கள் வீரப்ப மொய்லியை சந்தித்து கோரிக்கை மனுவையும் கொடுத்துள்ளனர்.

மேலும், ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவு தர வேண்டும் என்று கோரி சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவர் சிரஞ்சீவியையும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

294 உறுப்பினர்களைக் கொண்ட ஆந்திர சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 155 உறுப்பினர்கள் உள்ளனர்.

அதேபோல எம்.பிக்கள் குழுவும் ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக நியமிக்க வேண்டும் என்று கோரி சோனியா காந்தியை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஜெகன் மோகன் ரெட்டியையே முதல்வராக நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியிலும் ஆதரவு காணப்படுகிறது. இதுதொடர்பாக கட்சித் தலைமையகமான காந்தி பவன் முன்பு காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு “ஜெகன் மோகன் மட்டுமே முதல்வராக்கப்பட வேண்டும். வேறு யாரையாவது நியமித்தால் ஏற்க மாட்டோம்” என கோஷமிட்டனர்.

மேலும் ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவாளர்கள் எஸ்.எம்.எஸ். மூலமாகவும் பிரசாரத்தில் குதித்துள்ளனர். அதில், இந்திரா இறந்தபோது ராஜீவ் காந்தி பிரதமராக்கப்பட்டார். அப்படி இருக்கையில் ஏன் ஜெகன் மோகன் ரெட்டியை இப்போது முதல்வராக்கக் கூடாது என்று கேட்டுள்ளனர்.

தொழிலதிபரான ஜெகன்மோகன் ரெட்டி, தொலைக்காட்சி சானல் ஒன்றையும் சாக்ஷி என்ற நாளிதழையும் நடத்தி வருகிறார். கடப்பா தொகுதி எம்.பியாகவும் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதேசமயம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேறு சில தலைவர்களும் முதல்வர் பதவியைப் பிடிக்க அலை மோதி வருவதாகவும் கூறப்படுவதால், அடுத்த முதல்வர் யார் என்பதில் பரபரப்பு அதிகரித்துள்ளதாகவும் தெரிகின்றது

Source & Thanks : virakesari.lk

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil