ஈராக்கில் தனது படை நடவடிக்கை முடிவுற்றதாக அமெரிக்கா உத்தியோகபூர்வமாக பிரகடனம்

வியாழக்கிழமை, 15 டிசெம்பர் 2011 23:55

 

ஈராக்கில் தனது படை நடவடிக்கைகள் முடிவுற்றதாக அமெரிக்கா இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தியது.

2003 ஆம் ஆண்டு பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் இருப்பதாக கூறி அப்போதைய ஜனாதிபதி சதாம் ஹுஸைனின் அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா படையெடுத்தது. இப்போது அங்கு வன்முறைகள் தொடரும் நிலையில் அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறுகின்றனர்.

சுமார் 9 வருடகாலமாக இடம்பெற்ற யுத்தத்தினால் 4,487 அமெரிக்க படையினரும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஈராக்கியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். அதேவேளை 30,000 அமெரிக்கப் படையினர் காயமடைந்தனர்.

இந்த யுத்தத்திற்காக ஒரு ட்ரில்லியன் அமெரக்;க டொலர்கள் அமெரிக்காவினால் செலவிடப்பட்டுள்ளன.

ஈராக்கின் பாக்தாத் நகரில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றிய அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லியோன் பனேட்டா, ஈராக்கில் பணியாற்றிய 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கப் படையினருக்கும் நன்றி தெரிவித்தார்.

ஈராக்கிலிருந்து நாடு திரும்பும் படையினரை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, அமெரிக்க ஐக்கிய அமெரிக்காவானது ‘இறையாண்மை, ஸ்திரநிலை மற்றும் சுயசார்புள்ள ஈராக்கை ஏற்படுத்திவிட்டுத் திரும்பியுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனது படை நடவடிக்கைகள் முடிவுற்றதாக அமெரிக்கா இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தாலும் அங்கு இன்னும் இரு தளங்களை அமெரிக்கா கொண்டுள்ளது. அவற்றில் சுமார் 4000 படையினர் உள்ளனர்.

2007 ஆம் ஆண்டு யுத்தத்தின் உச்சக்கட்டத்தில் 505 தளங்களில் சுமார் 170,000 அமெரிக்கப் படையினர் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil