மக்கள் போராட்டத்திற்கான அமைப்பின் உறுப்பினர்கள் கடத்தப்பட்டமை குறித்து விசாரிக்க வலியுறுத்தல்
நேற்று சனிக்கிழமை கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் தமது யாழ். மாவட்ட
அமைப்பாளர் லலித்குமார வீரராஜ், மற்றுமொருவரும் கொலை செய்யப்பட்டதாக தமக்கு
தொலைபேசி அழைப்பு கிடைக்கப்பெற்றதாக மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து
பிரிந்துசென்ற மக்கள் போராட்டத்திற்கான இயக்கத்தின் ஏற்பாட்டாளர் சமிர கொஸ்வத்த
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட
வேண்டுமெனவும் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியாலளர்களுடனான சந்திப்பில் அவர்
கூறினார்.
லலித்குமார வீரராஜ் கொல்லப்பட்டுவிட்டதாக தமக்கு தொலைபேசி
அழைப்பு கிடைக்கப்பெற்றதாகவும் இருப்பினும் அவர் எங்குள்ளாரென்பது தொடர்பில் தமக்கு
இதுவரையில் தெரியவரவில்லையெனவும் சமிர கொஸ்வத்த குறிப்பிட்டுள்ளார். ‘இந்த தொலைபேசி
அழைப்பை தங்களால் நம்பமுடியாது. இருப்பினும் அவர் ஆபத்தான நிலையிலுள்ளாரென்பது
தெளிவாகிறது’ என அவர் கூறினார்.
கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும்
லலித்குமார வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் குறித்து அரசாங்கம் பொறுப்புக்கூற
வேண்டுமெனவும் சமிர கொஸ்வத்த தெரிவித்துள்ளார்.
லலித்குமார வீரராஜ்
வடபகுதியில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நிறுத்தவேண்டுமெனவும் லலித்குமார
வீரராஜ் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அவரது தந்தை தடுத்துநிறுத்தாவிடின்
தாங்கள் அவர் அரசியலில் ஈடுபடுவதிலிருந்து நீக்குவோமெனவும் லலித்குமார வீரராஜ்ஜின்
தந்தைக்கு அநாமதேய தொலைபேசி அழைப்பொன்று கிடைக்கப்பெற்றதாகவும் சமிர கொஸ்வத்த
கூறினார்.
இந்நடவடிக்கையில் மக்கள் விடுதலை முன்னணி ஈடுபட்டிருக்கக்கூடிய
சாத்தியத்தை நிராகரித்த அவர்,
வடக்கில் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு
மக்கள் விடுதலை முன்னணிக்கு அரசியல் பலம் இல்லையெனவும் விருப்பமில்லையெனவும்
தெரிவித்துள்ளார்