மனிக்பாம் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை

இலங்கையின் வடக்கே செட்டிகுளம் மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் உள்ள மாணவர்கள் தொடர்ச்சியாக ஆசிரியர் பற்றாக்குறைக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.

இதனால் அவர்களது கல்வி பாதிக்கப்பட்டிருப்பதாக ஐநாவின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

இங்கு ஆனந்தகுமாரசாமி, கதிர்காமர் ஆகிய இரண்டு முகாம்களில் உள்ள 1500 மாணவர்களுக்கு 60 ஆசிரியர்கள் மாத்திரமே கல்வி கற்பிப்பித்து வருகின்றார்கள்.

ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக வரும் 12 ஆம் திகதி தேசிய மட்டத்தில் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்களது பெற்றோர் கூறுகின்றார்கள்.

சரியாகப் பாடங்கள் நடைபெறாத காரணத்தினால் தம்மால் உரிய முறையில் பரீட்சைக்குத் தயார் செய்ய முடியாதிருப்பதாக மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனினும், மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் உள்ள குடும்பங்கள் ஆகஸ்ட் மாதமளவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு, அந்த இடைத்தங்கல் முகாம் மூடப்பட்டு விடும் என்றும், எனவே மீள்குடியேற்றப் பகுதிகளில் பாடசாலைகளை ஆரம்பித்து, மாணவர்களின் கல்வி வசதிக்குரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறும் சிவில் நிர்வாகம் மற்றும் இராணுவ அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன்பே கல்வித் துறை அதிகாரிகளுக்கு அறிவித்திருந்ததாகக் கூறப்படுகின்றது.

இதனால், மனிக்பாம் முகாம் மாணவர்களுக்கான வசதிகளைத் தொடர்ந்து பேணுவதில் சில  நடைமுறைச் சிக்கல்கள் எழுந்திருந்ததாக கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

மனிக்பாம் இடைத்தங்கல் முகாமைச் சேர்ந்த குடும்பங்கள் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றத்திற்காக அழைத்துச் செல்லப்படுகின்றார்கள். இந்தக் குடும்பங்களுடன் ஆசிரியர்களும் அங்கிருந்து வெளியேறி வருவதனால், அங்கு ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைய நேர்ந்ததாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

மனிக்பாம் முகாம் விரைவில் மூடப்பட்டுவிடும் என்ற காரணத்தினால், அங்கு ஒரு நிச்சயமற்ற நிலைமை தொடர்வதாக கல்வித்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். இந்த நிச்சயமற்ற நிலைமையினால் மனிக்பாம் முகாம் பாடசாலைகளுக்குப் புதிதாக ஆசிரியர்களை நியமிப்பது, அல்லது அங்கு மாணவர்களுக்குரிய வசதிகளை மேம்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் தங்களால் உரிய கவனம் செலுத்த முடியாதிருந்ததாகவும் கல்வித்துறை அதிகாரிகள் விளக்கமளித்திருக்கின்றனர்.

மனிக்பாம் இடைத்தங்கல் முகாமைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விப்பொதுத் தராதர பரீட்சைக்குத் தோற்றவுள்னனர். இந்த முகாம் மூடப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததனால், இந்த மாணவர்களுக்குரிய பரீட்சை நிலையம் கூட மீள்குடியேற்றப் பகுதியாகிய முல்லைத்தீவிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், எனினும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாகக் கடந்த மாத இறுதிப்பகுதியிலேயே மனிக்பாம் மாணவர்களுக்குரிய பரீட்சை நிலையத்தை அங்கேயே அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

அதேவேளை, கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் நலன் கருதி சிறப்பு ஏற்பாடாக அவர்களைப் பரீட்சைக்குத் தயார் செய்வதற்கான மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் ஏழாயிரத்துக்கும் குறைவானவர்களே இப்போது இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil