ஐ.தே.க.வின் ஆர்ப்பாட்டப் பேரணி: பின்னணியிலுள்ள அரசியல்! (ஓர் ஆய்வு) _

அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டப்
பேரணி ஒன்றை இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் நடத்தவிருக்கும் பிரதான
எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஏனைய எதிர்க்கட்சிகள் அனைத்தினதும் ஆதரவையும்
கோரியிருக்கின்றது. நீண்ட காலத்தின் பின்னர் அரசுக்கு எதிரான தமது பலத்தைக்
காண்பிப்பதற்கு இன்றைய ஆர்ப்பாட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளவே ஐ.தே.க. தலைமை
திட்டமிட்டுள்ளது. எனினும், இது எந்தளவுக்கு வெற்றிபெறும் என்பது
கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது.

காரணம்: மனோ கணேசன் தலைமையிலான
ஐனநாயக மக்கள் முன்னணியின் ஆதரவைப் பெறுவதில் ஐ.தே.க. தலைமை வெற்றிபெற்ற போதிலும்,
மற்றொரு முக்கிய எதிர்க்கட்சியான சரத் பொன்சேகா தலைமையிலான ஐனநாயக முன்னணி இன்றைய
போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

ஜே.வி.பி.யும் இந்த முன்னணியில்தான்
உள்ளது என்பதால் இன்றைய ஆர்ப்பாட்டம் எதிர்க்கட்சிகளை முழுமையாகப்
பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்கப் போவதில்லை.

இந்த நிலையில் இந்த
ஆர்ப்பாட்டப் பேரணியின் பின்னணியிலுள்ள ‘அரசியல்’ தொடர்பாக சுருக்கமாகப் பார்ப்பதே
இந்தக் கட்டுரையின் நோக்கம். ஐ.தே.கவைப் பொறுத்தவரையில் அரசியல் ரீதியாக அது
மிகவும் பலவீனமடைந்த நிலையிலேயே இருக்கின்றது. எதிர்க்கட்சி என்ற முறையில் அரசுக்கு
அழுத்தங்களைக் கொடுக்கக்கூடியளவுக்கு பலமான நிலையில் அது இல்லை என்ற குற்றச்சாட்டு
தொடர்ந்தும் நிலவி வருகிறது.

இந்த நிலை கட்சியைத் தொடர்ந்தும்
பலவீனப்படுத்துவதாக இருப்பதுடன், மக்களின் நம்பிக்கையைக் கட்சி இழப்பதற்கும்
காரணமாக உள்ளது. இன்றைய நிலையில் கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டுமானால்,
தேர்தல்களில் வெற்றிபெற்றுக் காட்ட வேண்டும். அல்லது, அரசை ஆட்டங்காணத்தக்க வகையில்
போராட்டங்களை நடத்த வேண்டும்.

மக்களைக் கவரக்கூடிய வகையிலான கோரிக்கைகளை
முன்வைத்து போராட்டங்களை நடத்துவதற்கு அண்மைக்காலம் வரையில் இயலாதிருந்த ஐ.தே.க.
தலைமைக்கு இப்போதுதான் சில காரணங்கள் கிடைத்திருக்கின்றன.

அதேவேளையில், போர்
வெற்றி என்ற கோஷத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகளின் பிரசாரங்கள் அனைத்தையும் தவிடு
பொடியாக்கிவந்த ஆளும் கட்சி, இப்போது அந்த நிலையில் இல்லை. பொருளாதாரப்
பிரச்சினைகளை மக்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள். போர் வெற்றிக் கோஷத்தின் மூலமாக
இதனை மேலும் மூடிவைத்திருக்கக்கூடிய இயலுமை அரசிடம் இருப்பதாகத்
தெரியவில்லை.

இதற்கு மேலாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு
வெள்ளைக்கொடி வழக்கில் மேலும் 3 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருப்பதும் மக்கள்
மத்தியில் அனுதாபத்தைத் தோற்றுவித்திருக்கின்றது.

இந்த நிலையில்தான் மூன்று
கோரிக்கைகளை முன்வைத்து தமது போராட்டத்தை முன்னெடுப்பதற்கும், அதற்கு
எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்று சேர்ப்பதற்கும் ஐ.தே.க.
திட்டமிட்டது.

1.மக்களுக்கு நிவாரணம் எதனையும் வழங்காத வரவு செலவுத்
திட்டத்தை எதிர்ப்பது.

2. அரசியல் பழிவாங்கலுக்குள்ளான சரத்
பொன்சேகாவை உடன் விடுதலை செய்ய வற்புறுத்துவது

3. நட்டத்தில்
இயங்கும் தனியார் நிறுவனங்களைப் பொறுப்பேற்கும் சட்டமூலத்தை
எதிர்த்தல்.

இந்த மூன்று கோரிக்கைகளையும் முன்வைத்து ஆர்ப்பாட்டப் பேரணி
ஒன்றை முன்னெடுத்தால் எதிர்க்கட்சிகளின் ஆதரவு தாரளமாகக் கிடைக்கும் என ஐ.தே.க.
தலைமை போட்ட கணக்கு, ஆரம்பத்திலேயே பிழைத்துப் போய்விட்டது. காரணம், ஐ.தே.கவின்
தலைமையில் நடைபெறும் போராட்டங்கள் எதிலும் பங்குபெற ஐனநாயக முன்னணி
மறுத்துவிட்டமைதான்.

சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணி,
ஜே.வி.பி. என்பனதான் இதில் பிரதான கட்சிகளாக உள்ளன. சரத் பொன்சேகாவின் விடுதலையை
ஐ.தே.க. தலைமை தமது அரசியல் நலன்களுக்குப் பயன்படுத்துவதை இவர்கள் விரும்பவில்லை
என்றே தோன்றுகின்றது. இதனால் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா உட்பட அவரது
கட்சியினர் இன்றைய போராட்டத்தில் பங்குகொள்ள மாட்டார்கள் என்பது ஐ.தே.க. பேரணிக்கு
முக்கிய ‘மைனஸ் பொயின்ட்’டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இவர்களைப்
பங்குபெறச் செய்வதற்கான பேச்சுக்களை ஐ.தே.க. தலைமை தொடர்ந்தும் மேற்கொண்டு
வருவதாகத் தெரிகின்றது. காரணம், இவர்கள் இல்லை எனில் இன்றைய ஆர்ப்பாட்டப் பேரணி
முழுமையான வெற்றியாக அமையாது என்பது ஐ.தே.க. தலைமைக்குத் தெரியும்
என்பதுதான்.

இரண்டாவதாக இன்றைய போராட்டத்தில் பங்குகொள்வதற்கு மனோ கணேசனும்
இரண்டு நிபந்தனைகளை விதித்திருந்தார்.

ஒன்று – சரத் பொன்சேகாவை
மட்டுமன்றி நீண்ட காலமாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க
வேண்டும்.

இரண்டு– இழுபறிப்படும் இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு
விரைவுபடுத்தப்பட வேண்டும்.

இந்த இரு கோரிக்கைகளும் உள்ளடக்கப்பட்டால்
தாமும் இந்தப் போராட்டத்தில் பங்குகொள்வதாக மனோ கணேசன் விதித்த நிபந்தனை ஐ.தே.க.
தலைமைக்குச் சங்கடத்தை ஏற்படுத்துவதாகத்தான் இருந்தது. ஆர்ப்பாட்டத்தில் இவற்றையும்
இணைத்துக்கொள்வது சிங்கள மக்களின் ஆதரவைப் பாதிக்குமா என்பதை ஆராய வேண்டியவராக
ரணில் விக்கிரமசிங்க இருந்துள்ளார்.

அதனால்தான் இதற்குப் பதிலளிக்க
அவருக்கு 4 நாட்கள் தேவைப்பட்டன. இருந்தபோதிலும் தமிழ் மக்களின் ஆதரவை வெறுமனே
கருவேப்பிலை போல ஐ.தே.க. தலைமை பயன்படுத்திக்கொள்வதை அனுமதிப்பதில்லை என்பதில் மனோ
கணேசன் உறுதியாக இருந்தார். மனோவின் இதே கருத்தைத்தான் கலாநிதி விக்கிரமபாகுவும்
வெளிப்படுத்தினார்.

ஜே.வி.பியும் இல்லாத நிலையில் மனோவும் இல்லை என்றால்
தமது போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் பங்குகொண்டதாகக் காட்டிக்கொள்ள முடியாது
என்ற நிலையில் மனோ கணேசனின் கோரிக்கையை ஐ.தே.க. தலைமை ஏற்றுக்கொண்டது.

ஞாயிற்றுக்கிழமை மனோவை அழைத்துப் பேசிய ரணில் விக்கிரமசிங்க அவரது
கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்ததுடன், தமது ஆர்ப்பாட்டப் பேரணியில்
பங்குகொள்ளுமாறு மனோவுக்கு நேரடியாக அழைப்பும் விடுத்திருந்தார்.

இந்த
நிலையில்தான் இன்றைய ஆர்ப்பாட்டப் பேரணியில் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள்
முன்னணியும், விக்கிரமபாகு கருணாரட்ண தலைமையிலான நவசமசமாஜக் கட்சியும்
பங்குகொள்கின்றன.

நீண்ட காலத்தின் பின்னர் அரசுக்கு எதிராக இடம்பெறும்
போராட்டம் என்பதால் இன்றைய ஆர்ப்பாட்டப் பேரணி அரசியல் ரீதியில் அனைவரினதும்
கவனத்தை ஈர்க்கின்றது. இதற்கு மக்களுடைய ஆதரவு எவ்வாறு இருக்கப் போகின்றது
என்பதைத்தான் அரசியல் மற்றும் இராஜதந்திர வட்டாரங்கள் அவதானிக்கின்றன.

வழமைப்போல் வெறுமனே ஆர்ப்பாட்டத்தை நடத்துவதோடு விட்டுவிடாமால் இதன் மூலமாக
எதிர்க்கட்சிகளை இணைத்த அரசியல் வேலைத்திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டும் என்ற
நோக்குடனேயே இந்த ஆர்பாபட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத்
தெரிகின்றது.

சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜனநாயகத்தை வெற்றிகொள்ள வேண்டுமாயின்
நிறம், மதம், இனம் பாராது அனைவரும் ஒன்றிணைந்து அணிதிரள வேண்டும் என்று கொழும்பில்
இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஐ.தே.க. பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அனைத்து
கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்ததிருந்தார்.

மக்களுக்குப் பயன் கிடைக்காத
நிலையில் தயாரிக்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்,
அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கு, சரத் பொன்சேகாவின் விடுதலை போன்ற கோரிக்கைகளை
முன்வைத்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக ஐ.தே.க. அழைப்பு
விடுத்திருந்தாலும், இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் நிபந்தனையுடனேயே பங்கேற்பதற்கு
ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய சோஷலிசக் கட்சி, நவசமசமாஜக் கட்சி ஆகியன
தீர்மானித்துள்ளமை குறிப்பிட்டு நோக்கத்தக்கது. இந்த ஆர்ப்பாட்டத்தில், நீண்டகலாமாக
இழுத்தடிக்கப்பட்டு வரும் தமிழ் மக்களின் பிரச்சினைகள், நீண்டகாலமாக தடுத்து
வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த கோரிக்கைகள் இதில் உள்ளடக்க
வேண்டும் என்று மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட ஐக்கிய சோஷலிசக்
கட்சி, நவ சமாஜக் கட்சி ஆகியன கேட்டுக் கொண்டதற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமை
ஒப்புக்கொண்டமை தமிழ்க் கட்சிகளையும் இணைத்த வேலைத் திட்டம் ஒன்றை
முன்னெடுப்பதற்குக் கிடைத்துள்ள ஒரு வாய்ப்பாக உள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்
ஒருவர் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெறுவது தொடர்பில்
நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ணவிடம் கேட்டபோது, தமது இரு
கோரிக்கைகளும் ஐ.தே.க. தலைமையால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதால் தமது கட்சியும் இந்த
ஆர்ப்பாட்டத்தில் பங்குபெறுவதற்கு தயாராக இருப்பதாக வீரகேசரி இணையத் தளத்திற்குத்
தெரிவித்தார்.

இதில் பங்கு பெறுவது தொடர்பில் ஜே.வி.பியின் பாராளுமன்ற
உறுப்பினர் விஜித்த ஹேரத் எம்.பியிடம் கேட்டபோது, இந்த ஆர்ப்பாட்டத்திற்கும்
எமக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை நாங்கள் இதில் கலந்துகொள்ளப்போவதுமில்லை என்று
வீரகேசரி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

ஐ.தே.கட்சியினால் அழைப்பு
விடுக்கப்பட்டதா? என்று கேட்டபோது, எந்தவொரு அழைப்பும் விடுக்கப்படவில்லை என்றும்
அவ்வாறு அழைப்பு விடுத்திருந்தாலும் நாம் அதில் பங்கு பெறப்போவதில்லை என்றும்
தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் அனைத்தும்
இணைந்திருந்தன. இன்று அந்த ஒருமைப்பாட்டை மீண்டும் ஏற்படுத்துவதற்கு ஐ.தே.க.
தலைமையால் முடியாமல் போய்விட்டது.

கட்சியின் தலைமைப் பதவியைத் தக்கவைத்துக்
கொள்வதில் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரணிகளை
ஒன்றுபடுத்தி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திக்காட்ட வேண்டிய தேவையும் உள்ளது.

இந்நிலையில் இது வெறுமனே அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணியாகக்
காணப்பட்டாலும் இதன் பின்னணியிலுள்ள அரசியல் நகர்வுகள், கட்சி மற்றும் தனிப்பட்ட
நலன்களை அடிப்படையாகக் கொண்டதாகவே உள்ளதென்பதே நிதர்சனம்.

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil