மட்டக்களப்பு சிந்தாமணி பிள்ளையாரிலும் படையினருக்கு சந்தேகம்

மட்டக்களப்பு சிந்தாமணி பிள்ளையாரிலும் படையினருக்கு சந்தேகம்!

Published on November 27, 2011-12:07 pm    ·

மட்டக்களப்பு எல்லைவீதியில் அமைந்துள்ள சிந்தாமணி பிள்ளையாரிலும் சிறிலங்கா இராணுவத்திற்கு சந்தேகம் ஏற்பட்டதால் இன்று அந்த ஆலயத்தில் நடைபெற இருந்த சிந்தாமணி பிள்ளையார் ஆலய வரலாறு என்ற நூல்வெளியீட்டு விழாவுக்கு இராணுவத்தினர் தடை செய்துள்ளனர்.

நூல் வெளியீட்டுவிழா என்ற பெயரில் மாவீரர் பூசையையும் வழிபாட்டையும் நடத்திவிடுவார்கள் என அச்சம் கொண்ட இராணுவத்தினர் நூல் வெளியீட்டு விழாவுக்கு தடைசெய்ததுடன் இன்று ஆலயத்திற்கு யாரும் செல்லக்கூடாது என்றும் ஆலய கதவை திறந்து மணி அடிக்காமல் தீபத்தை காட்டிவிட்டு உடனடியாக பூட்டி விட்டு செல்ல வேண்டும் என்றும் இராணுவத்தினர் உத்தரவிட்டுள்ளனர்.  இந்த ஆலயத்தை சுற்றியும், ஆலயத்திற்கு முன்னால் உள்ள மாநகர சனசமூகநிலைய கட்டிடத்திலும் இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொள்ள இருந்தார்.   இன்று விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நாள் என்பதைச் சுட்டிக்காட்டி பாதுகாப்புத் தரப்பு இந்த நிகழ்ச்சியை இன்று நடத்தக் கூடாதென இராணுவத்தினர் ஏற்பாட்டாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர் என யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஆரையம்பதி புதுக்குடியிருப்பில் ‘கதிரவன்’ சஞ்சிகை வெளியீட்டு விழா நடைபெற இருந்தது. இதனையும் இராணுவத்தினர் தடைசெய்துள்ளனர். இதற்கும் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொள்ள இருந்தார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் சில இந்து ஆலயங்களில் இன்று வழமையான கண்டாமணி அடித்தல் மற்றும் நித்திய பூசை நடைபெறுவதற்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் தடைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஆலய நிர்வாகத்தினர் தன்னிடம் புகார் தெரிவித்ததாகக் கூறிய யோகேஸ்வரன் இந்த விடயம் தொடர்பாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். கண்டாடமணி அடிக்காமல் பூசையை செய்யுமாறு படையினர் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil