சுவிஸ் சூரிச் சிவன் கோவிலில் மாவீரர் நினைவாலயம்!
சுவிஸ் சூரிச் சிவன் கோவிலில் மாவீரர் நினைவாலயம்!
Published on November 19, 2011-6:33 pm · 1 Comment
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் உயிர் நீத்த அனைத்து விடுதலை வீரர்களுக்கும், பொதுமக்களுக்குமாக நினைவாலயம் ஒன்று சுவிஸ், சூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் சைவத்தமிழ் சங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மாவீரர் நினைவாலயம் எதிர்வரும் 25ஆம் திகதி திறக்கப்பட உள்ளதுடன் மாவீரர் தினமான 27ஆம் திகதி மாவீரர்களுக்கு அகவணக்கம் செய்து பூசை வழிபாடு செய்ய விரும்புபவர்கள் அன்றைய தினம் வருகை தந்து அகவணக்கம் செய்து பூசை வழிபாடுகளிலும் ஈடுபடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாயகத்தில் உள்ள மாவீரர் குடும்பங்கள் மாவீரர் தினத்தில் தமது உறவுகளுக்கு ஆலயங்களுக்கு சென்று பூசை செய்வதுடன் வீடுகளில் தமது பிள்ளைகளின் படங்களுக்கு விளக்கேற்றி அகவணக்கம் செய்ய கூடிய சூழ்நிலையிலேயே உள்ளனர். மாவீரர் இல்லங்கள் அனைத்தும் இடிக்கப்பட்ட நிலையில் அவர்களால் ஆலய வழிபாடுகளை மட்டுமே செய்ய முடிவதுடன் வீடுகளில் விளக்கேற்றி அகவணக்கம் செய்கின்றனர்.
அதேபோல புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்களும் போட்டிகள் மோதல்களுக்குள் சிக்காது ஆலயங்களுக்கு சென்று பூசை வழிபாடுகளை செய்து வீடுகளில் விளக்கேற்றி அகவணக்கம் செலுத்துவதுதான் ஆத்மசாந்தியையும் மனஅமைதியையும் தரும்.
புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்களுக்கு முன்மாதிரியாக சுவிஸ் சூரிச் சிவன்கோவிலில் மாவீரர் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. போட்டிகள் மோதல்கள், வியாபார நோக்கங்களுக்குள் சிக்காது சூரிச் சிவன் கோவில் போன்ற ஆலயங்களில் அமைக்கப்படும் நினைவாலயங்களுக்கு சென்று அகவணக்கம் செலுத்துவதே மாவீரர்களின் ஆத்மசாந்தியாக இருக்கும்.
சூரிச் சிவன் கோவில் நிர்வாகம் செய்திருக்கும் இந்த உயரிய பணியை புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள அனைத்து சைவ ஆலயங்களும் செய்ய வேண்டும். இதுவே மாவீரர்களுக்கும் மக்களுக்கும் அமைதியை தேடித்தரும்.
புலம்பெயர் தமிழர்கள் தமிழர் விழுமியங்களையும், பண்பாட்டையும், தெய்வவழிபாட்டையும் கைவிடாது தமிழுக்காவும், சைவசமயத்திற்காகவும் அரும்பாடு பட்டு உழைத்து வரும் நாம் எமது விடுதலைக்காக உழைத்து உயிர்நீத்த எமது உடன்பிறப்புகளுக்கு நினைவாலயம் அமைத்து அவர்களை மறவாது தெய்வங்களுக்கு இணையாக ஆலயத்திற்குள்ளேயே வழிபடவேண்டும் என்பதற்காக சுவிஸ் சூரிச் சிவன் கோவிலில் நினைவாலயம் அமைக்கப்படுவதாக அந்த ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நினைவாலயம் எதிர்வரும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 7மணிக்கு திறந்து வைக்கப்பட உள்ளது.
மாலை 6மணிக்கு அபிஷேகம், மூலவர் பூசை என்பனவற்றைத்தொடர்ந்து 7மணிக்கு நினைவாலயம் திறக்கப்பட்டு புனிதர்களுக்கான தீப வழிபாடு இடம்பெறும்.
புனித மாவீரர்நாளில் அனைத்து பொதுமக்களும் வருகை தந்து இப்புனிதர்களுக்கு அகவணக்கம் செலுத்துவதோடு ஆத்மசாந்தி பூசைகளிலும் கலந்து கொள்ளுமாறு சைவத்தமிழ் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.