தமிழீழ விடுதலைப் போர் மீண்டும் ஒருமுறை வெடிக்கும்!- சென்னையில் காசி ஆனந்தன் முழக்கம்

முள்ளிவாய்க்கால் முடிந்து மெல்ல மெல்ல செய்திகள் மறைந்து அமுக்கப்பட்டு எல்லாம்
தீர்ந்து விட்டதென்று யாரும் நினைக்காதீர்கள். நாங்கள் நெருப்பின் நடுவில்
இருக்கிறோம். ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல விரும்புகின்றேன். தமிழீழ விடுதலைப்போர்
மீண்டும் வெடிக்கும் என்று சென்னையில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்
முழங்கினார்.

சென்னையில் நேற்று முன்தினம், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய சிந்தல்,
பொழிச்சல், நறுக்கு  ஆகிய புதுக்கவிதை வடிவில் எழுதப்பட்ட மூன்று நூல்கள்
வெளியிட்டு நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு ஆவேசமாக
தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உலகத் தமிழர் இயக்க தலைவர் பழ. நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச்
செயலாளர் வைகோ, நடிகர் மணிவண்ணன், கவிஞர் தமிழிச்சி உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து
கொண்டனர்.

அங்கு உரையாற்றிய உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் தெரிவித்ததாவது:

வியட்நாமில் மக்கள் அழிக்கப்பட்ட நேரத்தில் இந்தியாவில் புதுக்கவிதை
எழுதியவர்களும் இலக்கியம் படைத்தவர்களும் உள்ளார்கள். கருத்து வெளியிட்டவர்களும்
இருக்கின்றார்கள். ஆனால் ஈழத்தில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொலையுண்டு விழுந்த
நேரத்தில், உலகத்தில் யார் ஈழத்தமிழ் மக்களுக்காக எழுதினார்கள்?

எத்தனையோ பெரிய கொடுமைகள் ஈழத்தில் நிகழ்த்தப்பட்டன. யார் அந்த மக்களுக்காகக்
கைகொடுத்தார்கள்? பெண் உறுப்பில் வெடிகுண்டு வைத்து மட்டக்களப்பில் கோணேஸ்வரி
சிதைக்கப்பட்டாள்.

புங்குடுதீவு கண்ணகி கோவிலில் வைத்து சாரதாம்பாள் வெறியர்களால் பாலியல்
பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டாள். அவர்களின் வேதனைகளை இந்த உலகம் கணக்கில்
எடுக்கவில்லை.

இவ்வாறே போரின் இறுதியில் இசைப்பிரியா. அவளைச் சிறைப்படுத்திய இனவெறியர்கள்
போர்க்கைதிகளை நடத்தும் உலக விதிப்படியா நடத்தினார்கள்? இல்லையே!

இன்று அவற்றையெல்லாம் எழுத்தில், கவிதையில், திரைப்படத்தில், சிற்பத்தில்
வடிக்கும் காலம் வந்துள்ளது. ஓவியர் சந்தானம் முள்ளிவாய்க்கால் படுகொலையினை வைத்து
வரைந்த படத்தினை மாதிரியாகக் கொண்டு முருகன் என்கின்ற சிற்பி தஞ்சையில் சிலை
வடிக்கிறார். அந்த நினைவுச்சின்னம் முள்ளிவாய்க்கால் கொடுமையினை இந்த உலகுக்கு
என்றும் பறை சாற்றி நிற்கும்.

அப்படிப்பட்ட கலைஞனே இன்று இந்த மண்ணுக்குத் தேவை. தமிழீழத்திற்காக
தமிழ்நாட்டில் பல படைப்பாளிகள் படைப்புக்களை எழுதிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

ஆனால் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கு எழுதிய எழுத்தாளர்களின் அளவு, ரஷ்ய
விடுதலைப்போரின்போது எழுதிய எழுத்தாளர்களின் அளவு, தமிழினத்தின் விடுதலைக்காக நடந்த
போராட்டத்திற்காக எழுதியவர்களை எண்ணித்தான் பார்க்கவேண்டும்.

பல திரைப்படங்கள் இன்று உருவாகிக்கொண்டு இருக்கின்றன. இன்னும் இன்னும் கூடுதலான
திரைப்பட கலைஞர்கள் தமிழினத்திற்கு கைகொடுக்கவேண்டும். விடுதலைக்காக கலைஞர்கள்
இயங்கவேண்டும் எழுதவேண்டும், என்ற கருத்தினை படைப்பாளிகள் மத்தியில்
முன்வைக்கின்றேன்.

உலகில் வாழ்கின்ற அனைத்து நாடுகளிலும் அத்தனை அரசுகளின் கீழ் இயங்குகின்ற
நாடுகளிலும் அறவழியில் போராடுவதற்கான உரிமை மக்களுக்கு இருக்கின்றது. ஆனால்
மக்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகளை எதிர்த்து வாய் திறந்து பேசமுடியாத நாடாக
உலகில் இலங்கை மட்டுமே காணப்படுகின்றது.

தமிழ் மக்கள் அப்படிப்பட்ட கொடுமையான சூழலில் வாழ்கிறார்கள்.

தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட இயக்கம் தமிழர் கூட்டமைப்பு. அவர்களால் எந்த
அறப்போராட்டத்தையும் முன்னெடுக்க முடியவில்லை. அவர்களால் அங்கு பேசமுடியாது.
பேசினால் நாளை அவர்களுக்கு உயிர் இருக்காது. ம்.. என்றால் சிறைவாசம். ஏன்…
என்றால் வனவாசம் என்ற நிலை இன்று தமிழீழத்தில் இருக்கிறது. இதை கேட்பதற்கு யாருமே
இல்லை.

முள்ளிவாய்க்கால் முடிந்து மெல்ல மெல்ல செய்திகள் மறைந்து அமுக்கப்பட்டு எல்லாம்
தீர்ந்து விட்டதென்று யாரும் நினைக்காதீர்கள். நாங்கள் நெருப்பின் நடுவில்
இருக்கிறோம். ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல விரும்புகின்றேன். தமிழீழ விடுதலைப்போர்
மீண்டும் வெடிக்கும் என்றார் காசிஆனந்தன்.

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil