ப.சிதம்பரம்’: சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்காக காத்திருக்கும் காங்கிரஸ்!

டெல்லி: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிடக் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.

உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்துள்ள மனுவில், 2007ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்துக்கும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புள்ளது. ஆனால், அவரை சிபிஐ விசாரிக்கவில்லை. இதனால் அவரையும் இந்த வழக்கில் சேர்க்குமாறு சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

இதற்கு ஆதாரமாக கடந்த மார்ச் மாதம் நிதியமைச்சகம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தையும் தாக்கல் செய்தார். அந்தக் கடிதத்தில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் முறையில் விற்குமாறு ப.சிதம்பரம் கூறியிருந்தால் ஊழலே நடந்து இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடிதத்தை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்ப ஒப்புதல் அளித்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தனது அமெரிக்க சுற்றுப் பயணத்தின்போது நியூயார்க்கில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கடிதம் குறித்து விளக்கினார்.

கடிதத்தை தனது அமைச்சகம் அனுப்பினால், அதை வெளியிட்டது பிரதமர் அலுவலகம் தான் என்று பிரணாப் கூறியதாகத் தெரிறது. இதைத் தொடர்ந்து ப.சிதம்பரத்திடமும் பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் பேசினார்.

அப்போது, தான் பதவி விலக விரும்புவதாக சிதம்பரம் கூறினார். ஆனால், நான் நாடு திரும்பும் வரை காத்திருக்குமாறு பிரதமர் கோரியதையடுத்து சிதம்பரம் அமைதியாக உள்ளார்.

இந் நிலையில் நேற்று டெல்லி திரும்பிய பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து இது தொடர்பாக விளக்கினார். அதே போல சிதம்பரமும் சோனியாவை சந்தித்துப் பேசினார். அப்போது, பதவி விலக விரும்புவதாக சிதம்பரம் கூறினார்.

ஆனால், பிரதமர் நாடு திரும்பட்டும், அதே போல சாமியின் மனு மீது உச்ச நீதிமன்றம் எடுக்கப் போகும் முடிவையும் பார்க்கலாம். அதன் பிறகு என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்யலாம் என்று சிதம்பரத்திடம் சோனியா கூறியதாகத் தெரிகிறது.

சிதம்பரம் பதவி விலகிவிட்டால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்தகட்ட தாக்குதலுக்கு உள்ளாகப் போவது பிரதமர் மன்மோகன் சிங் தான் என்பதால், சிதம்பரத்தை பதவியில் நீட்டிக்க வைக்க காங்கிரஸ் தீவிரமாக முயலும் என்று தெரிகிறது.

ஸ்பெக்ட்ரம் விற்பனை விஷயத்தில் அரசின் கொள்கைகளில் தவறில்லை. அதை அமல்படுத்திய விதத்தில் தான் தவறு நேர்ந்துள்ளது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதாடும் என்று தெரிகிறது. இதன்மூலம் தவறு செய்தது முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா மட்டுமே என்று மத்திய அரசு வாதாடவுள்ளதாகத் தெரிகிறது.

சிதம்பரம் விஷயத்தில் உச்ச நீதிமன்றம் இன்று சாமியின் வழக்கை விசாரித்தாலும் தீர்ப்பு உடனடியாக வெளியாக வாய்ப்புகள் குறைவே.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தான் ப.சிதம்பரம் மீதான நடவடிக்கை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவும் பிரதமரும் முடிவெடுப்பர் என்று தெரிகிறது.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil