ராசா, கனிமொழி மீது குற்றச்சாட்டுகள் பதிவு- நீதிமன்றம் இன்று முடிவு

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராசா, திமுக எம்பி கனிமொழி ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது குறித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தனது தீர்பபை வழங்கும் என்று தெரிகிறது.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த வழக்கை நீதிபதி ஓ.பி.சைனி தினந்தோறும் விசாரித்து வந்தார்,

இறுதியாக நடந்த விசாரணையின்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் லலித், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரும் ஏதோ ஒரு வகையில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டு நாட்டுக்கு ரூ. 30,984 கோடி அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளன. இனால் இவர்கள் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும் என்றார்.

ஆனால், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேரின் வழக்கறிஞர்களும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். சிபிஐயால் குற்றம் சாட்டப்பட்ட யாரும் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், இதனால் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யக் கூடாது என்றும் வாதாடினர்.

ராசாவின் வழக்கறிஞர் வாதாடுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் நாட்டுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், இப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலும் நாடாளுமன்றத்திலேயே கூறிவிட்டனர். இதனால் இந்த வழக்கு சட்டரீதியில் நிற்காது, நிச்சயம் தோற்கும்.

இந்த விவகாரத்தில் பிரதமரையே நேரில் அழைத்து சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்றார். (இதே கோரிக்கையை ராசாவே நேரடியாக நீதிமன்றத்தில் முன் வைத்ததும் குறிப்பிடத்தக்கது)

அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிந்துவிட்ட நிலையில், இப்போது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வது தொடர்பான தனது முடிவை நீதிபதி இன்று அறிவிப்பார் என்று தெரிகிறது.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil