ஜூலை- 13 குண்டு வெடிப்பு வழக்கு : குஜராத்தில் பதுங்கிய பயங்கரவாதி சிக்கினான்

ஆமதாபாத்: 21 பேரை பலி வாங்கியதுடன் 100 பேரை காயமுற செய்த மும்பை ( ஜூலை- 13 ) தொடர் குண்டு வெடிப்பில் தேடப்பட்ட பயங்கரவாதி ஒருவனை பயங்கரவாத தடுப்பு படை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

இவனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் மும்பை கொண்டு வருகின்றனர்.

கடந்த ஜூலையில் மக்கள் நடமாட்டம் உள்ள ஜாவேரி பஜார், ஒபேரா ஹவுஸ் மற்றும் தாதர் பகுதியில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 21 பேர் கொல்லப்பட்டனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இந்த வழக்கில் முக்கிய தடயங்கள் எதுவும் கிடைக்காமல் போலீசார் திணறி வந்தனர். ரகசிய காமிரா ஒன்று மட்டும் பெரும் துணையாக இருந்தது.

இந்த வழக்கில் தொடர்புடையதாக இந்தியன் முஜாகீதின் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த முகம்மது அப்துல் ஷாக்கூர் (32), இவரது உறவுக்காரர் அயூப்ராஜா அமின் ஷாகின் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் துரித விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் போலீசாரால் முக்கிய நபராக தேடப்பட்டு வந்த ஒருவன் இன்று காலை குஜராத்தில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டான். சூரத் நகர் லிம்பாயாத் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த இவனது பெயர் யூசூப். மும்பையில் குண்டு வெடித்த நேரத்தில் இது தொடர்பாக மகாராஷ்ட்டிரா மற்றும் கேரளாவில் உள்ள நபர்களிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளான். இதனையடுத்து இவனது போன் போலீசாரால் கண்காணிக்கப்பட்டது.இந்த போனில் குஜராத்துக்கு இடம்பெயருமாறு கேட்டுக்கொண்டதன் பேரில் சூரத் நகருக்கு சென்றுள்ளான். போனை கண்காணித்த போலீசார் இவன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து காலையில் சுற்றி வளைத்த போலீசார் கைது செய்தனர். யூசூப் பலத்த பாதுகாப்புடன் மகாராஷ்ட்டிரா கொண்டு வரப்படுகிறார். விசாரணைக்கு பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவான் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil