முடிவு ஆமதாபாத் நீதிமன்றத்திடம்: குஜராத் கலவர வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

புது தில்லி, செப்.12: குஜராத் கலவர வழக்கில் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் 63 அதிகாரிகளை சேர்ப்பது குறித்து ஆமதாபாத் விசாரணை நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

குஜராத் கலவர வழக்கில் உயிரிழந்த காங்கிரஸ் எம்.பி. இஷான் ஜாப்ரியின் மனைவி ஜகியா தொடுத்திருந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு கூறிவிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் ஜகியா தாக்கல் செய்திருந்த மனுவில், ஆமதாபாத் நீதிமன்றம் குஜராத் கலவர வழக்கை ஒழுங்காக விசாரிக்கவில்லை என்று குற்றம்சுமத்தியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஆ.கே.ராகவன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு விசாரணை செய்து, உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.

இந்நிலையில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகிய ஜகியா, சிறப்புப் புலனாய்வுக் குழுவும் சரிவர விசாரணை செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.

இதையடுத்து சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கையை ஆய்வு செய்து ரகசிய அறிக்கை தாக்கல் செய்ய மூத்த வழக்குரைஞர் ராஜு ராமச்சந்திரனை உச்ச நீதிமன்றம் நியமித்தது. நீதிமன்றத்தின் அமிகஸ் குரியாக (நீதிமன்ற நண்பர்) செயல்பட்ட அவர், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து, உச்ச நீதிமன்றத்தில் ரகசிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.

குஜராத் கலவரத்தை ஒடுக்க முதல்வர் நரேந்திர மோடி மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அவர்களையும் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் ஜகியா கோரியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் டி.கே.ஜெயின், பி.சதாசிவம், அப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை, அமிகஸ் குரியின் அறிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்த நீதிபதிகள், குஜராத் கலவர வழக்கில் முதல்வர் மோடி மற்றும் 63 அதிகாரிகளை சேர்ப்பதா, வேண்டாமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் முடிவெடுக்க விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டனர்.

இதுகுறித்து ஆமதாபாத் விசாரணை நீதிமன்றமே முடிவெடுத்துக் கொள்ளட்டும் என்றும், இந்த வழக்கை இனிமேலும் தொடர்ந்து கண்காணிக்க இந்த நீதிமன்றம் விரும்பவில்லை என்றும் கூறி, உத்தரவு பிறப்பிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

மேலும், இந்த வழக்கு குறித்து விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு தனது இறுதி அறிக்கையை ஆமதாபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிமன்றத்தில் பரபரப்பு: முக்கியமான இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்ததால் நீதிமன்ற வளாகம் காலையில் இருந்தே பரபரப்பாக இருந்தது. வழக்கை தொடுத்தவர்கள் தரப்பினரும், பாஜகவினரும் நீதிமன்றத்தில் குவிந்தனர்.

ஏராளமான பத்திரிகை, தொலைக்காட்சி செய்தியாளர்களும் திரண்டனர். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளிக்கப் போகிறது என்று நாடு முழுவதுமே பரவலான எதிர்பார்ப்பு இருந்தது.

பாஜக-காங்கிரஸ் கருத்து

அருண்ஜேட்லி: இந்த வழக்கில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எந்தவித தொடர்பும் இல்லை. இதைத்தான் எங்கள் கட்சி திரும்ப திரும்ப கூறி வருகிறது. மோடிக்கு எதிராக ஆதாரமும் இல்லை. இந்த வழக்கில் மேற்கொள்ளப்பட்ட தவறான பிரசாரத்தை நீதிமன்றம் ஆதாரமாக எடுத்து கொள்ளவில்லை.

இனிமேலும் மோடியை குற்றம்சாட்டுவதை காங்கிரஸ் கட்சி நிறுத்திக் கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எங்கள் கட்சி வரவேற்கிறது.

அத்வானி: உச்ச நீதிமன்ற உத்தரவு பாஜகவுக்கும் மோடிக்கும் நிவாரணத்தை அளித்துள்ளது. நீண்ட நாட்களாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தி வருகின்றனர். கட்சிப் பணிகளை அவர் சிறப்பாக ஆற்றிவருகிறார். அனைத்து விதமான பணிகளையும் செயல்படுத்தில் அவர் திறமை வாய்ந்தவர் என்றார்.

காங்கிரஸ்: இந்த வழக்கில் இருந்து நரேந்திர மோடியை குற்றமற்றவர் என்று நீதிமன்றம் அறிவிக்க வில்லை என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி குறிப்பிட்டார். இந்த வழக்கு கீழ் நீதிமன்றத்தில் நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்த நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்யவும் அதிகாரம் உள்ளது. ஆகையால், உச்ச நீதிமன்ற உத்தரவை பாஜக தவறாக புரிந்து கொண்டுள்ளது என்றார்.

Source ?& Thanks : dinamani

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil