குஜராத் கலவரம்- நரேந்திர மோடியை விசாரிப்பது குறித்து கீழ் கோர்ட் முடிவு செய்யலாம்- உச்ச நீதிமன்றம்

டெல்லி: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அகமதபாத் நகரில் குல்பர்க் சொசைட்டியில் நடந்த பயங்கர வன்முறையில் 69 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இது தொடர்பான விசாரணை அறிக்கையை கீழ் நீதிமன்றத்திடம் தாக்கல் செய்யுமாறு மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமசந்திரனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2008ம் ஆண்டு பிர்பரவி 28ம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் எரித்துக் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்பி இஷான் ஜாப்ரியின் மனைவி ஷகியா ஜாப்ரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இந்தக் கலவரத்தில் நரேந்திர மோடிக்கு உள்ள நேரடித் தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும் என்று ஷகியா கோரியிருந்தார்.

இந் நிலையில் குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் சிபிஐ இயக்குனர் ஆர்.கே.ராகவன் தலைமையில் உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு விசாரணைக் குழு (Special Investigation Team-SIT) தனது 600 பக்க அறிக்கையை கடந்த பிப்ரவரியில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அதில், நரேந்திர மோடியை விசாரிக்கும் அளவுக்கு இந்த வன்முறையில் அவருக்கு நேரடித் தொடர்பு ஏதும் இல்லை என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சுதந்திரமான ஆய்வு நடத்தவும், சிறப்பு விசாரணைக் குழு சேகரித்த ஆவணங்கள், ஆதாரங்கள், சாட்சிகளை ஆய்வு செய்தும், நரேந்திர மோடி அவரது அமைச்சரவை சகாக்கள் மீது என்ன வகையான நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்தும் பரிந்துரை செய்யுமாறு மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரனுக்கு (amicus curiae) உத்தரவிட்டது.

இந் நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் குஜராத் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் பட் நீதிமன்றத்தில் ஒரு அபிடவிட் தாக்கல் செய்தார். அதில், முஸ்லீம்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில், கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அவசரம் காட்ட வேண்டாம் என்று நரேந்திர மோடி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக பட் கூறியிருந்தார்.

மேலும் ஜூலை மாதத்தில் அவர் தாக்கல் செய்த இன்னொரு அபிடவிட்டில், குஜராத் கூடுதல் அட்வகேட் ஜெனரல் துஷார் மேத்தா, நரேந்திர மோடியின் அலுவலக அதிகாரிகள், ஆர்எஸ்எஸ்காரரான குருமூர்த்தி ஆகியோர் இடையே நடந்த இ-மெயில் பரிமாற்றங்கள் குறித்தும், அதில் சிறப்பு விசாரணைக் குழுவை சமாளிப்பது எப்படி, இந்த வழக்கை சட்டரீதியில் எதிர்கொள்வது எப்படி என்பது தொடர்பாக இவர்களிடையே நடந்த சம்பாஷணைகள் இடம் பெற்றிருந்தன.

இந் நிலையில் ராஜூ ராமச்சந்திரன் ஆய்வு நடத்தி இன்று தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்திடம் தாக்கல் செய்தார். அதில், ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு தாக்கல் செய்த அறிக்கையை ராமச்சந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளதாகவும், மோடி மீதான புகார்களை இந்தக் குழு சரியாக விசாரிக்கவில்லை என்றும் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

இதன்மீது உச்ச நீதிமன்றம் இன்று தனது உத்தரவைப் பிறப்பித்தது.

நீதிபதிகள் ஜெயின், சதாசிவம், ஆப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் அளித்தத் தீர்ப்பில், சிறப்பு விசாரணைக் குழு தனது இறுதி விசாரணை அறிக்கையை கீழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதை கீழ் கோர்ட் மாஜிஸ்திரேட் விசாரித்து, முதல்வர் நரேந்திர மோடியையும் விசாரிக்க வேண்டுமா அல்லது ஷாகியா ஜாப்ரியின் வழக்கை மூட வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும். இந்த வழக்கை நாங்கள் தொடர்ந்து மேற்பார்வையிட வேண்டிய அவசியம் இருப்பதாகக் கருதவில்லை என்று கூறினர்.

இதன்மூலம் இந்த விவகாரத்தில் முதல்வர் நரேந்திர மோடிக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது.

இந்தத் தீர்ப்பு குறித்து ஷாகியா ஜாப்ரி கூறுகையில், சிறப்பு விசாரணைக் குழு தனது விசாரணையை முறையாக நடத்தவில்லை. எல்லா ஆதாரங்களையும் அவர்கள் நிராகரித்துவிட்டது. எங்களது பிரார்த்தனைகள் எல்லாம் வீணாகிவிட்டன என்றார்.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil