பறிமுதல் செய்யப்பட்ட ஊழல் அதிகாரி வீடு பள்ளிக்கூடமாக மாறியது: பீகார் அரசு அதிரடி

பாட்னா: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் ஆடம்பர பங்களாவை, பீகார் அரசு, பள்ளிக்கூடமாக மாற்றியுள்ளது.

பீகார் மாநிலத்தில், 2007ம் ஆண்டில், நீர்பாசனத்துறை செயலராக இருந்தவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவ் சங்கர் வர்மா. அதே ஆண்டு ஜூலை 6ம் தேதி, சிவ்சங்கர் வர்மாவின் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத ரூ. 1.43 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஒன்பது கிலோ தங்கக் கட்டிகள், ரூ. 17 லட்சம் ரொக்கம், ரூ. 20 லட்சம் மதிப்பிலான பங்கு மார்க்கெட் முதலீட்டுப் பத்திரங்கள், ரூ. 81 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ஆடம்பர பங்களாக்கள் இதில் அடங்கும். இதையடுத்து, வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்ததாக சிவ் சங்கர் வர்மா உள்ளிட்ட அவரது உறவினர்கள் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, பீகார் சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டில், வர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், பெய்லி சாலையில் உள்ள வர்மாவுக்குச் சொந்தமான மூன்று மாடி ஆடம்பர பங்களாவை, கடந்த 4 ம் தேதி, பீகார் அரசு பறிமுதல் செய்தது. இந்த கட்டடத்தை, மனித வளத்துறையிடம் அளித்து, அதை பள்ளிக்கட்டடமாக மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்தது. இதற்கு, பீகார் அமைச்சரவை கடந்த 6ம் தேதி ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, ரூகான்பூரா குடிசைப் பகுதியில் செயல்பட்டு வந்த ஆரம்பப் பள்ளிக்கூடம், பறிமுதல் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் ஆடம்பர பங்களாவுக்கு மாற்றப்பட்டது. இந்த பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். பீகார் முதல்வர் நிதிஷ் குமார், கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, ஊழல் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவை கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி, நாட்டிலேயே முதன்முறையாக, பீகார் மாநிலத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் ஆடம்பர பங்களா பறிமுதல் செய்யப்பட்டு, பள்ளிக்கூடமாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil