ஜெகனுக்கு ஒரு லட்சம் கோடி வந்தது எப்படி? : டில்லியில் பிரசாரம்: தெ.தேசம் தீவிரம்

புதுடில்லி: மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும், கடப்பா தொகுதி எம்.பி.,யுமான ஜெகன் மோகன் ரெட்டி ,கடந்த ஏழு ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளதாக, ஏழு பக்க அறிக்கை ஒன்றை தயார் செய்து, அதை பார்லிமென்ட் உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கும் பணியை, தெலுங்குதேசம் கட்சி கடந்த திங்கள் கிழமை டில்லியில் துவங்கியது.

தெலுங்குதேசம் கட்சி தயாரித்த ஏழு பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மறைந்த ராஜசேகர ரெட்டி ஆந்திர முதல்வராக பதவி வகித்த ஏழாண்டுகளில், அவரது குடும்பம், நாட்டின் சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துள்ளது. ராஜசேகர ரெட்டி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தெலுங்குதேசம் கட்சித் தொண்டர்கள் 600 பேரை கண்மூடித்தனமாக கொலை செய்துள்ளனர். ஜெகன் மோகன் ரெட்டிக்கு சொந்தமான நிறுவனங்களில் நடந்த வெள்ளம் போன்ற பணப் பரிவர்த்தனைகளை தகுந்த சாட்சி, ஆதாரங்களுடன் தெரிவித்தும், அரசியல் காரணங்களால், மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு, நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. ராஜசேகர ரெட்டியின் குடும்ப நிறுவனங்களில் முறைகேடாக வகைகளில், கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம், ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்துகள் குறித்து, அமலாக்கத் துறை இயக்குனர் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று, உரிய ஆதாரங்களுடன் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை டில்லியில், பார்லிமென்ட் உறுப்பினர்களுக்கு, தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த நாமா நாகேஸ்வர ராவ், ரமேஷ் ரத்தோட், நாராயணா ஆகியோர் வழங்கி வருகின்றனர்.

அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தெலுங்குதேசம் கட்சி சார்பில், 2009ம் ஆண்டு, ராஜசேகர ரெட்டி குடும்பத்தினரின் ஊழல் குறித்த விரிவான விவரங்கள் அடங்கிய புத்தகம் ஒன்று தயார் செய்யப்பட்டு, வினியோகிக்கப்பட்டது. இந்த புத்தகத்தின் அடிப்படையில், அப்போதே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், இப்போது மிகப் பெரிய ஊழலை அவர்களால் செய்திருக்க முடியாது. குறுக்கு வழியில் அவர்கள் சம்பாதித்த பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும். அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இப்போதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெலுங்குதேசம் எம்.பி.,க்கள் கூறினர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil