2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் இல்லை: டிராய் அறிக்கையை பரிசீலிக்க உச்சநீதிமன்றம் முடிவு

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் அரசுக்கு இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று கூறி “டிராய்” அளித்துள்ள அறிக்கையை ஆய்வு செய்யப் போவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசின் தலைமை கணக்கு தணிக்கையாளர்(சி.ஏ.ஜி) அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக வழக்கு பதிவு செய்து முன்னாள் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா உட்பட பலரை சி.பி.ஐ அடுத்தடுத்து கைது செய்தது.

வழக்கில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் அரசுக்கு ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு என்று சி.பி.ஐ தெரிவித்தது. இதற்கிடையே மத்திய அரசுக்கு டிராய் அனுப்பியுள்ள அறிக்கையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி உள்ள யுனிடெக் வயர்லெஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா தாக்கல் செய்த ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சஞ்சய் சந்திரா சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி டிராய் அறிக்கை பற்றி குறிப்பிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எச்.எல்.தத்து ஆகியோர் பெஞ்ச் டிராய் அறிக்கையை பரிசீலனை செய்ய விரும்பினர்.

ஆனால் டிராய் அறிக்கை அரசு துறைகளுக்கு இடையேயான ஒரு அறிக்கை. அது ரகசியமானது என்று கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ஹரின் ராவல் கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில்,”ரகசியமானது என்றால், பத்திரிகைகளுக்கு அந்த அறிக்கையின் நகல் கிடைத்தது எப்படி? அதை நீதிமன்றத்திடம் இருந்து மறைக்க முடியாது. அந்த அறிக்கையில் டிராய் குறிப்பிட்ட தகவல் சரியா? தவறா? என பரிசீலிக்க விரும்புகிறோம்”என்று கூறினர். இதற்கு பதிலளித்த ஹரின் ராவல் டிராய் அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்கிறேன் என்று கூறினார்.

Source & Thanks : newindianews

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil