கர்நாடக அரசை ஆட்டிப்படைத்த ரெட்டி சகோதரர் கைது:ரூ.5கோடி-30 கிலோ தங்கம் அள்ளியது சி.பி.ஐ.

பெங்களூரூ: கர்நாடக மாநிலத்தில் பெரும் செல்வாக்கு கொண்ட ரெட்டி சகோதரர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டியை சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று காலையில் கைது செய்தனர்.


பா.ஜ., அரசில் மாநில அமைச்சர்களில் யார் இடம் பெற வேண்டும் என்ற அளவுக்கு அதிகாரம் படைத்த இவர்கள் மீது சுரங்க மோசடி தொடர்பான குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இன்று கைது செய்யப்பட்டபோது இவர்கள் வீட்டில் இருந்து மொத்தம் ரூ. நாலரை கோடி ரூபாய் சிக்கியது. மேலும் ஜனார்த்தன ரெட்டி வீட்டில் இருந்து 30 கிலோ தங்கமும் அதிகாரிகளால் எடுத்து செல்லப்பட்டிருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாநில லோக்அயுக்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான சுரங்கம் டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதனால் அரசுக்கு பல நூறு கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது. மேலும் சுப்ரீம் கோர்ட்டிலும் இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. சுரங்கத்தை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுப்ரீம் கோர்ட் பணித்திருந்தது. சுரங்கத்தில் இருந்து கனிமத்தை வெட்டி எடுக்கவும் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை 10 பேர் கொண்ட சி.பி.ஐ., அதிகாரிகள் குழுவினர் பெல்லாரியில் உள்ள மாஜி அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி வீட்டில் புகுந்து அதிரடி ரெய்டு நடத்தினர். தொடர்ந்து ரெட்டியை கைது செய்து ஐதராபாத் அழைத்து சென்றனர். ரெட்டியின் உறவினரும் ஒபலாபுரம் சுரங்க நிறுவனத்தின் மானேனஜிங் டைரக்டருமான சீனிவாச ரெட்டியையும் கைது செய்துள்ளனர். இருவரும் இன்று மதியம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரனை நடத்திய நீதிபதி 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். சி,பி.ஐ., காவல் குறித்து வரும் 7 ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் எனவும் உத்தரவிட்டார்.

ஜனார்த்தன ரெட்டி குற்றமற்றவர் என நிரூபிப்பார் என்று பா.ஜ., மேலிடம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த கைது மூலம் சட்டம் தனது கடமையை செய்திருக்கிறது என காங்,. கருத்து வெளியிட்டுள்ளது.

யார் இந்த ஜனார்த்தன ரெட்டி ? : கர்நாடக மாநிலத்தில் சுரங்க தொழில் நடந்தி கோலோச்சி வரும் பெரும் செல்வந்தர் ஜனார்த்தன ரெட்டி. கடந்த பா.ஜ., ஆட்சியில் சுற்றுலா துறை அமைச்சராக இருந்தார். பா.ஜ.,வில் முக்கியத்துவம் அளிக்கப்படும் இவருக்கு கருணாகரரெட்டி, சோமசேகர ரெட்டி என்ற இரு சகோதரர்கள் உள்ளனர். தான் கை காட்டும் நபர்தான் முதல்வராக வேண்டும் , அமைச்சராக இருக்க வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தவர். இவருக்கு 30 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருந்தது.

சமீபத்தில் முதல்வர் எடியூரப்பா தங்களுக்கு அணுசரணையாக இருக்க மறுக்கிறார் என்றும் இவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கினார். தொடர்ந்து உயர் மட்ட தலைவர்கள் நடத்திய பேச்சில் சமரசம் ஏற்பட்டது. நேற்று இவரது ஆதரவாளர் ஸ்ரீராமுலு (பெல்லாரி தொகுதி) தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். தனக்கு அமைச்சர் பதவியில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஏமாற்றம் மிஞ்சியதால் ராஜினாமா செய்ததாக தெரிகிறது.

தொடர்ந்து ஸ்ரீ ராமுலு வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டனர். இது குறித்து ஸ்ரீராமுலு கூறுகையில், என் வீட்டில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது சட்டவிரோதம் இதன் பின்னணியில் காங்கிரஸ் சதிஉள்ளது. மாநில சுரங்க விவகாரங்கள் தொடர்பான விஷயத்தில் தலையிட மத்திய அரசுக்கு உரிமையில்லை . ‌சோனியாவின் தூண்டுதலில் தான் ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.

மத்திய அரசு தலையீடு இல்லை ; அமைச்சர்கள் : மத்திய கம்‌பெனி விவகார துறை அமைச்சர் வீரப்பமொய்லி கூறியதாவது: ஜனார்த்தனரெட்டி கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் சட்டம் தன் கடமையை செய்துள்ளது. தவறு செய்பவர்கள் ஒவ்வொருவருக்கும் இது ஒரு பாடம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான் என்றார்.

பாராளுமன்ற விவகராத்துறை அமைச்சர் ராஜிவ்சுக்லா கூறுகையில், ஜனார்த்தன ரெட்டி கைது விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு இல்லை. சி.பி.ஐ.தான் நடவடிக்கை எடுத்துள்ளது. கடமையை சரியாக செய்துள்ளது என்றார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil