வரலாறு காணாத விலையேற்றம்மேலே மேலே போகிறது தங்கம்

புதுடில்லி:தங்கம் விலை நேற்று, வரலாறு காணாத வகையில், மீண்டும் ஒரு உச்சத்தை தொட்டது. ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 896 ரூபாய் அதிகரித்தது.

சர்வதேச அளவிலான பொருளாதார நிலைமைகள் சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லாததே இதற்கு முக்கிய காரணம்.

சென்னையில் நேற்று முன்தினம், ஒரு சவரன் ஆபரண தங்கம் 20 ஆயிரத்து 32 என்ற அளவில் விற்றது. ஆனால், நேற்று உலகளவில் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டதாலும், அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாலும், பலரும் தங்களது முதலீட்டை தங்கத்தின் பக்கம் திருப்பினர். இது தான் நேற்று பெரும் ஏற்றத்திற்கு காரணமாக அமைந்தது.
சென்னையில் நேற்று காலை, சவரனுக்கு 648 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 20 ஆயிரத்து 680 ரூபாயை எட்டியது. மாலையில் மேலும் அதிகரித்து, சவரனுக்கு 896 ரூபாய் அதிகரித்தது. சவரன் 20 ஆயிரத்து 928க்கு விற்றது. ஒரே நாளில் இவ்வளவு அதிகரித்தது இதுதான் முதல் முறை. விரைவில் 21 ஆயிரம் ரூபாயை தொட்டு விடும் என்ற நிலைமை உருவாகியுள்ளது.

தமிழகத்தை பொருத்தமட்டில் ஆடி முடிந்து ஆவணி மாதம் துவங்கியுள்ளதால், திருமணத்திற்காக நகை வாங்குவது அதிகரித்துள்ளது. தங்கத்தின் தேவை அதிகரிப்பால், விலை கூடியுள்ளதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்தனர். திருமண சீசன் காரணமாக, தங்க நகை வியாபாரிகளும் தங்கத்தை பெருமளவில் வாங்கி, சேமிப்பில் வைக்கின்றனர். இதுவும் விலை உயர்வுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

உலக நடப்புகளையொட்டி, இந்திய பங்குச் சந்தையில் நேற்று பெரும் சரிவு ஏற்பட்டது. முன்னணி பங்குகள் அனைத்தும் பெரும் சரிவை சந்தித்தன. இதனால், பலரும் பங்குச் சந்தையில் போட்டிருந்த தங்களது முதலீடுகளை எடுத்து, தங்கத்தில் முதலீடு செய்ததும் காரணம் என்று கூறப்படுகிறது.பொருள் சந்தையில் முன்பேர வர்த்தகத்தில் நேற்று, தங்கத்திற்கு அதிக கிராக்கி இருந்தது. பலரும் தங்கத்தில் முதலீடு செய்ததால், அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான ஒப்பந்தங்கள் அதிகரித்தன.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil