இந்திய பெருங்கடலில் கனிம வளங்களை சுரண்டும் சீனா: வேடிக்கை பார்க்கும் இந்தியா

இந்தியப் பெருங்கடலில் சுமார் 10,000 சதுர கி.மீ பரப்பளவில் பாலிமெடாலிக் சல்பைட் கனிமங்களை தோண்டியெடுக்க உள்ளது சீனா. இதனால் இந்தியா பெரும் கவலையடைந்துள்ளது.

இந்தியாவை ஒட்டிய தென் மேற்கு இந்தியப் பெருங்கடலில் இந்த கனிமங்களைத் தேடவும், அதை தோண்டியெடுக்கவும் சீனாவுக்கு சர்வதேச கடல் படுகை ஆணையம்(International Seabed Authority-ISA) அனுமதியளித்துள்ளது. இத்தகவலை சீனாவின் கடல் தாதுக்கள் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

1979ம் ஆண்டு கிழக்கு பசிபிக் கடல் பகுதியில் விஞ்ஞானிகள் கடல் படுகையை ஆராய்ந்து கொண்டிருந்த போது மெக்சிகோ அருகே கடலுக்குள் பெரும் மலைகளையும் அதன் மீது சிம்னி போன்ற அமைப்புகளையும் கண்டனர். அந்த சிம்னிகளில் இருந்து சுடுநீர் பாய்ந்து கொண்டிருந்தது. இந்தப் பகுதிகளைச் சுற்றி ஏராளமான உலோகத் தாதுக்கள் இருப்பதும் தெரியவந்தது.

அந்தத் தாதுக்களில் தாமிரம்(copper), துத்தநாகம்(zinc), ஈயம்(lead), தங்கம், வெள்ளி ஆகியவை அடங்கும். இவை கடல் நீரில் உள்ள சல்பைடுடன் கலந்து பாலிமெட்டாலிக் சல்பைட்களாக உள்ளன.

இதையடுத்து உலகம் முழுவதுமே இந்த கனிமங்கள் குறித்த ஆர்வமும், அதை தோண்டியடுக்க போட்டியும் ஆரம்பமானது.

இந்தியப் பெருங்கடலில் இந்த கனிமங்களை தோண்டியெடுக்க சீனா தீவிரமாக களமிறங்கி அனுமதியும் பெற்றுவிட்டது. சர்வதேச கடல் படுகை ஆணையத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி அடுத்த 15 ஆண்டுகளுக்கு சீனா இந்த 10,000 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட பகுதியில் கடலுக்கடியில் கனிமங்களைத் தோண்டலாம்.

மேலும் கிழக்கு பசிபிக் கடலில் 75,000 சதுர கி.மீ. பரப்பளவிலும் கனிமங்களை எடுக்க சீனாவுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

இந்த அனுமதி கிடைத்த கையோடு பசிபிக் கடலில் தனது ஆழ்கடல் ஆய்வுக் களத்தை இறக்கிவிட்டு விட்டது சீனா. நேற்று 5,180 மீட்டர் ஆழத்தை எட்டிவிட்ட இந்தக் கலத்தில் 3 ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.

இதையடுத்து இந்தியா பெரும் கவலையடைந்துள்ளது. கனிம ஆராய்ச்சி என்ற பெயரில் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவை ஒட்டிய பகுதிகளில் சீனாவின் கடற்படை கப்பல்கள் சுற்றி வரும்.

இந்தப் பகுதியின் கனிமப் படிமங்கள் குறித்த அனைத்து விவரங்களும் சீனா வசம் போகும். மேலும் இந்தப் பகுதியில் நடமாடும் இந்திய நீர்மூழ்கிக் கப்பல்களின் ரகசிய நடமாட்டத்தையும் சீனாவால் இனி கண்காணிக்க முடியும்.

இது குறித்த தனது கவலையை இந்திய கடற்படையின் உளவுப் பிரிவு(Directorate of Naval Intelligence-DNI) மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு நாம் ராணுவ உதவி செய்யாவிட்டால் சீனா போய் உதவி செய்துவிடுமே என்ற கவலை உள்ள மத்திய அரசுக்கு, நமது நாட்டுக்கு அருகிலேயே சீனா கடலைத் தோண்ட ஆரம்பித்துள்ளது குறித்து கவலையில்லை போலிருக்கிறது. இதனால் இந்த விடயத்தில் இதுவரை மத்திய அரசு வாயே திறக்கவில்லை.

Source & Thanks : thatstamil

1 விமர்சனம் to “இந்திய பெருங்கடலில் கனிம வளங்களை சுரண்டும் சீனா: வேடிக்கை பார்க்கும் இந்தியா”

  1. EDDAPPANAI SUDDAPPAN SON Says:

    வணக்கம் வணக்கம் அனைவருக்கும் ! இலங்கையில் இருக்கும்போது யாரும் வணக்கம் யாருக்கும் சொல்லி நாம் அறியோம் அதைவிட கொஞ்சம் பந்தாவா பேசும்போது ஒவொரு சொல்லுக்கும் இடையில் ஆங்கில வார்த்தை பிரோயோகிபோரை நாம் பார்த்து இருக்கிறோம் அன்று தன் இன மக்களை கம்பத்தில் கட்டி துரோகி என்று கூறி சுட்டவர்கள் , இன்று மகிந்தவுடன் கூட்டு சேர்ந்து இசை கச்சேரி நடத்துகின்றனர் இதை தட்டி கேட்க யாருமில்லையா

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil