மருத்துவமனை சென்று வர கர்ப்பிணி பெண்களுக்கு பயணப்படி : மத்திய அரசு புதிய திட்டம்

புதுடில்லி : “மருத்துவமனைகளில், குறிப்பிட்ட மருந்து இருப்பு இல்லாவிட்டால், அந்த மருந்து தேவைப்படும் நோயாளிக்கு அதை வரவழைத்து கொடுக்க வேண்டியது, மருத்துவமனை நிர்வாகத்தின் கடமை’ என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில், இது குறித்து அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறியதாவது: பிரசவ காலங்களில் சிசு மற்றும் தாய் இறப்பை தவிர்ப்பதற்காக, சில திட்டங்களை, அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்படி, பிரசவக் காலங்களில் கர்ப்பிணிகளுக்கு, மருத்துவமனையில் இலவசமாக மருந்து, உணவு மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன. அருகே உள்ள மருத்துவமனைக்கு சென்று வர பயணப்படியும் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும், 2 கோடியே, 60 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன.

இவற்றில், போதிய மருத்துவ வசதி மற்றும் பராமரிப்பு இல்லாததால், 20 லட்சம் சிசுக்கள் இறந்து விடுகின்றன. இதேக் காரணத்தால், 70 ஆயிரம் பெண்களும், கர்ப்பகாலத்தில் இறந்து விடுகின்றனர். சிசேரியன் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு, அரசு மருத்துவமனைகளில் ஒரு மாத காலத்துக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும். உரிய மருந்துகள், மருத்துவமனையில் இல்லாவிட்டால், அதை உடனடியாக வரவழைத்து, நோயாளிக்கு அளிக்க வேண்டியது மருத்துவமனை நிர்வாகத்தின் கடமை.

நீரிழிவு மற்றும் புற்றுநோயை முன்னதாகவே கண்டறியும் திட்டத்தை, 100 மாவட்டங்களில், முன்னோடி திட்டமாக அரசு செயல்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கான தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து வினியோகிக்கப்படுவது குறித்து, சரியானத் தகவலை அறிய, சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோரின் தொலைபேசி எண் மற்றும் விலாசத்தை அளிக்கும்படி கேட்டுள்ளோம். இவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறினார்.

“பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோருக்கு தொலைபேசி இல்லாததால், அவர்களால் தொலைபேசி எண் குறித்த தகவலை அளிக்க முடியாது’ என, உறுப்பினர்கள் சபையில் கோஷம் எழுப்பினர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil