பிரதமரையும் விசாரிக்க மக்கள் ஆதரவு:மாதிரி ஓட்டெடுப்பில் பரபரப்பு முடிவு

புதுடில்லி:பிரதமரையும் விசாரிக்கும் அதிகாரம் லோக்பால் அமைப்புக்கு அளிக்கப்பட வேண்டும் என, டில்லியில் நடத்தப்பட்ட மாதிரி ஓட்டெடுப்பில் 82 சதவீதம் பேர் ஓட்டளித்துள்ளனர்.


இந்த பரபரப்பான மாதிரி ஓட்டெடுப்பு, மத்திய அமைச்சர் கபில் சிபலின், சாந்தினி சவுக் தொகுதியில் எடுக்கப்பட்டது.

உயர் பதவியில் உள்ளவர்களை விசாரிக்க வழி செய்யும் லோக்பால் அமைப்புக்கு பிரதமரையும் விசாரிக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும் என, சமூக நல ஆர்வலர் அன்னா ஹசாரே வற்புறுத்தி வருகிறார். இதற்கு மத்திய அரசு ஒப்புக் கொள்ளாததால், வரும் 16ம் தேதி முதல் டில்லியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்க திட்டமிட்டுள்ளார்.லோக்பால் அமைப்பு வரைவு மசோதா குழுவில் அரசு சார்பில் இடம் பெற்றிருந்த மத்திய அமைச்சர் கபில் சிபலின், டில்லியில் உள்ள சாந்தினி சவுக் தொகுதியில் சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. நான்கு லட்சம் பேருக்கு இது குறித்த விண்ணப்பம் வழங்கப்பட்டது.இந்த விண்ணப்பத்தில் எட்டு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதுவரை 86 ஆயிரம் விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. 72 ஆயிரம் விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

14 ஆயிரம் விண்ணப்பங்கள் மழை தண்ணீரில் நனைந்துவிட்டன. சேகரிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் வரையில் கணக்கிட்டபோது 82 சதவீதம் பேர், பிரதமரை விசாரிக்கும் அதிகாரம் லோக்பால் அமைப்புக்கு அளிக்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
தலைமை நீதிபதிகளையும் விசாரிக்கும் அதிகாரம் லோக்பால் அமைப்புக்கு அளிக்கப்பட வேண்டும் என 86 சதவீதம் பேரும், உயர் அதிகாரிகளை விசாரிக்கும் அதிகாரம் தேவை என 89 சதவீதம் பேரும், எம்.பி.,க்கள் அனைவரையும் விசாரிக்க இந்த அமைப்புக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என 88 சதவீதம் பேரும், ஊழல் செய்யும் அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என 84 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கபில் சிபல் குறிப்பிடுகையில், “100 சதவீதம் பேர் இதற்கு ஆதரிக்கவில்லை. எனவே, மக்கள் நடுநிலையில் தான் உள்ளனர்’ என கிண்டலடித்துள்ளார்.

லோக்பால் வரைவு கமிட்டியில் சமூக நல ஆர்வலர் சார்பில் இடம் பெற்றிருந்த அர்விந்த் கெஜ்ரிவால் குறிப்பிடுகையில், “கபில் சிபலின் தொகுதியான சாந்தினி சவுக்கில் நடந்த கருத்துக் கணிப்பில், லோக்பால் அமைப்புக்கு பிரதமரை விசாரிக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும் என மக்கள் ஓட்டளித்துள்ளனர். எனவே, இது போன்ற கருத்துக் கணிப்பை நாடு முழுவதும் நடத்த வேண்டும்’ என்றார்.

பிரதமர் பொய் பேசலாமா?டில்லியில் நிருபர்களிடம் நேற்று அன்னா ஹசாரே கூறியதாவது:லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்கலாம் என, மன்மோகன் சிங் முன்பு ஒப்புக் கொண்டிருந்தார். அவரே தற்போது அது ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளார். அரசில் உள்ள நிறைய பேர் பொய் சொல்கின்றனர்.ஆனால், நல்ல மனிதரான பிரதமர் மன்மோகன் சிங்கே பொய் பேசலாமா? அவரே பொய் சொன்னால் என்ன ஆவது? லோக்பால் விசாரணை வரம்பில் பிரதமரை சேர்க்கக்கூடாது என மன்மோகன் சிங்கே கூறுவது துரதிருஷ்டவசமானது. இதுவரை நானும், மக்களும் அவரை மரியாதைக்குரியவராகத் தான் கருதி வந்தோம்.

ஊழலுக்கு எதிரான கடுமையான சட்டம் கொண்டு வர போராட்டம் நடத்தும் என்னை அனுமதிக்காவிட்டால், சிறை செல்லவும் தயாராக இருக்கிறேன். போராட்டம் நடத்துவதற்கு குறிப்பிட்ட இடம் தான் தேவை என, நான் வற்புறுத்தவில்லை.என்னுடைய போராட்டத்தின் போது வரும் கூட்டத்தினருக்கு சவுகரியமான இடத்தை ஒதுக்கிக் கொடுத்தால் நல்லது. என்னுடைய போராட்டம் பார்லிமென்டிற்கு எதிரானதல்ல; அரசுக்கு எதிரானது தான். இதை நான் விளக்கி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதன் பிறகும் அவர் இப்படி கூறியிருப்பது தான் வருத்தமளிக்கிறது.போலீசார் எங்களுக்கு எந்த இடத்தை ஒதுக்கிக் கொடுத்தாலும் ஏற்கத் தயார். எங்களுடைய குறிக்கோள், போராட்டம் நடத்தும் இடமல்ல; லோக்பால் தான் எங்கள் நோக்கம்.நான் அரசை, “பிளாக்மெயில்’ ஏதும் செய்யவில்லை. வலுவுள்ள லோக்பால் அமைப்பை உருவாக்கத் தான் போராடுகிறேன். அவர்கள் தான் என்னை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வழி செய்துள்ளனர். மக்களின் குரலை செவிமடுத்திருந்தால், பெரிய அளவில் ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை. நாங்கள் ராஜா அல்ல ஊழல் செய்வதற்கு.இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.

ஹசாரேவின் போராட்டத்தை எதிர்த்து வழக்கு:மகாராஷ்டிராவைச் சேர்ந்த வர்த்தகர் ஹேமந்த் பாட்டீல் என்பவர், அன்னா ஹசாரே நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை தடுத்து நிறுத்தும்படி கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுமக்கள் நலன் கோரும் மனுவை தாக்கல் செய்துள்ளார்.”ஹசாரேவின் கோரிக்கை ஏற்கப்பட்டு லோக்பால் மசோதா உருவாக்கப்பட்ட நிலையில் அவர், அரசை அச்சுறுத்தும் வகையில் நடத்தும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது. அவரது நடவடிக்கை, பார்லிமென்டின் நடைமுறையில் தலையிடுவதாக உள்ளது.லோக்பால் அமைப்புக்கு பிரதமரை விசாரிக்கும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என ஹசாரே கோருவது சட்ட விரோதமானது. எனவே, இவர் நடத்த உள்ள போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என, மனுவில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் விதண்டா வாதம்:”லோக்பால் மசோதா தொடர்பாக, கபில் சிபலின் சாந்தினி சவுக் லோக்சபா தொகுதியில், கருத்துக் கணிப்பு நடத்திய அன்னா ஹசாரே, அந்தத் தொகுதியில் போட்டியிடத் தயாரா’ என, காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின், தகவல் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறியதாவது:லோக்பால் மசோதா தொடர்பாக, மத்திய அமைச்சர் கபில் சிபலின், டில்லி சாந்தினி சவுக் லோக்சபா தொகுதியில், கருத்துக் கணிப்பு நடத்தி, அதன் முடிவை ஹசாரே வெளியிட்டுள்ளார். முடிந்தால், 2014ம் ஆண்டு நடக்கும் அடுத்த லோக்சபா தேர்தலில், அந்தத் தொகுதியில், அன்னா ஹசாரே போட்டியிடட்டும் பார்க்கலாம். அப்போது உண்மை வெளிவரும்.பார்லிமென்டின் திறன் மற்றும் சிறப்பு அதிகாரத்தின் மீது ஹசாரேயும், அவரது நண்பர்களும் நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்கள் சர்வே வேண்டுமானால், நடத்தலாம். ஆனால், அரசியல் சட்டத்தின் அடிப்படை அமைப்போடு விளையாடக் கூடாது.இவ்வாறு மணீஷ் திவாரி கூறினார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil