டாடா ஸ்கை டிடிஎச் சேவையில் கலைஞர் டிவியை சேர்க்க ராசா முயன்றார்- உதவியாளர் சண்டோலியா

டெல்லி: 2ஜி ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ தன்னை மிரட்டியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் உதவியாளர் ஆர்.கே.சண்டோலியா குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓபி சைனி முன்னிலையில் 2ஜி ஊழல் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை வாதாடிய ஆ.ராசா பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மீது குற்றம் சாட்டினார்.

அடுத்ததாக தொலை தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுராவின் வழக்கறிஞர் மத்திய அமைச்சரவை மீது குற்றம் சாட்டினார். இந்த வழக்கில் தனது கட்சிக்காரர் பலிகடாவாக ஆக்கப்பட்டுள்ளதாக வாதாடினார்.

இந்நிலையில் இன்று ஆ.ராசாவின் உதவியாளர் ஆர்.கே.சண்டோலியா தரப்பில் வாதம் நடந்ததது. அப்போது சண்டோலியா கூறியதாவது,

ஒரு வருட விசாரணைக்குப் பிறகு சிபிஐ என்னை இந்த வழக்கில் சேர்த்தது. சாட்சியமாக மாறு இல்லையென்றால் குற்றவாளி ஆகிவிடுவாய் என்று என்னை மிரட்டியது. 2ஜி விவகாரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் ஒன்றும் என் கையில் இருந்ததில்லை.

நான் அமைச்சருக்கு உதவியாக இருந்தேன். அமைச்சர் என்ன முடிவு எடுத்துள்ளீர்கள் என்று உதவியாளரால் கேள்வி கேட்க முடியுமா? அவர் எடுக்கும் முடிவுகள் சரியா, தவறா என்று எனக்கு கவலை இல்லை. நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. நான் கையெழுத்துப் போட்ட ஒரு ஆவணத்தையாவது சிபிஐயால் காட்ட முடியுமா? எத்தனையோ பேர் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்கள். ஆனால் சிபிஐ அவர்களை எல்லாம் விட்டுவிட்டது.

இந்த விவகாரத்தில் நிரா ராடியாவையும், டாடாவையும் சிபிஐ விசாரிக்காதது ஏன்?.

டாடா ஸ்கையின் டிடிஎச் சேவையில் கலைஞர் டிவியை சேர்க்க ராசா முயன்றது உண்மை என்றார்.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil