2ஜி: பிரதமரை நான் குற்றம் சாட்டவில்லை-நீதிமன்றத்தில் ராசா திடீர் ‘பல்டி’!

டெல்லி: டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் பங்குகள் விற்பனைக்கு அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தான் ஒப்புதல் அளித்தார். பிரதமரின் முன்னிலையில்தான் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதை பிரதமர் மறுக்க முடியாது. வேண்டுமானால் அதை அவர் மறுத்துப் பார்க்கட்டும் என்று நேற்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கூறிய முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா இன்று திடீரென தனது நிலையை மாற்றிக் கொண்டார்.

நான் பிரதமரையோ ப.சிதம்பரத்தையோ குற்றம் சாட்டவில்லை, பிரதமரை விசாரிக்க வேண்டும் என்றும் கூறவில்லை. நான் கூறாத விஷயங்களை நான் கூறியதாக மீடியாக்கள் தான் தவறான செய்திகள் வெளியிட்டுவிட்டன என்று ராசா இன்று பல்டி வாதம் செய்தார்.

அதே நேரத்தில் டிபி ரியாலிட்டி நிறுவன பங்குகள் விற்பனைக்கு ஒப்புதல் அளித்தவர் என்ற முறையில் அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட வேண்டும். அவர் நீதிமன்றத்துக்கு வந்து சாட்சியளிக்க வேண்டும் என்றும் ராசா கூறியுள்ளார்.

நேற்று இந்த வழக்கு விசாரணை நடந்தபோது ராசாவின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் சுஷில்குமார், பிரதமர், ப.சிதம்பரம் ஆகியோருக்குத் தெரிந்தே டிபி ரியாலிட்டி பங்குகள் விற்கப்பட்டதாகவும், ஸ்பெக்ட்ரம் ஏலத்தைப் பொறுத்தவரை முந்தைய பாஜக கூட்டணி ஆட்சியில் பின்பற்றப்பட்ட கொள்கைகளையே பின்பற்றியதாகவும் கூறியிருந்தார்.

ராசா தவறு செய்திருப்பதாகச் சொன்னால் 1993ம் ஆண்டிலிருந்து தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்த அனைவரையுமே கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் என்றார்.

இந் நிலையில் இன்று பிரதமர் விஷயத்தில் தனது நிலையை ராசா மாற்றிக் கொண்டுள்ளார்.

ராசா கூறியதை ஆதாரமாகக் கருத முடியாது-கபில் சிபல்:

இதற்கிடையே பிரதமர், ப.சிதம்பரம் மீது குற்றம் சாட்டி சிறப்பு நீதிமன்றத்தில் ஆ.ராசா கூறியதை ஆதாரமாகக் கருத முடியாது என்று தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.

நேற்று நிருபர்களிடம் பேசிய அவர், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின்போது சில தகவல்களை ராசா தெரிவித்துள்ளார். அவர் கூறியதை வைத்துக் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங்கும், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் பதவி விலக வேண்டும் என பாஜக தலைவர் நிதின் கட்காரி வலியுறுத்தி உள்ளார்.

நீதிமன்றத்தில் நடைபெறும் விவாதத்தின் அடிப்படையில் பிரதமரும், உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும் என ஒரு தேசியக் கட்சியின் தலைவர் கோரிக்கை விடுத்திருப்பது துரதிருஷ்டவசமானது. நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது.

இதுபற்றி கட்காரி, அவரது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும் சிறந்த வழக்கறிஞருமான அருண் ஜேட்லியிடமோ, அல்லது வேறு வழக்கறிஞரிடமோ ஆலோசனை நடத்தலாம். அதன் பிறகு இதில் அவர் கருத்தைத் தெரிவிக்க வேண்டும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தும் நிதின் கட்காரி, கர்நாடக முதல்வர் எதியூரப்பா மீது என்ன நடவடிக்கை எடுத்தார்?.

மக்களவைக் கூட்டத் தொடர் துவங்க உள்ள நிலையில் பாஜகவுக்கு ஏதாவது பிரச்சனை வேண்டும். முக்கியமான பிரசச்னைகள் ஏதுமில்லாததால் 2ஜி விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளது என்றார் கபில் சிபல்.

சூரியனைப் பார்த்து எச்சில் உமிழ்வது போன்றது-மணீஷ் திவாரி:

இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி, அப்பழுக்கற்ற நேர்மைக்கும், கண்ணியத்துக்கும் உதாரணமாகத் திகழ்பவர் பிரதமர் மன்மோகன் சிங். அவரது கண்ணியத்தைக் குறைக்க முயல்வது சூரியனைப் பார்த்து எச்சில் உமிழ்வது போன்றதாகும்.

நீதிமன்றத்தில் ராசா கூறியவை அனைத்தும் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற முறையில் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான அவரது வாதமாகும். பிரதமர் மீது குற்றம் சுமத்தியுள்ளவர் ஒரு அமைச்சரல்ல. குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கூறியுள்ள கருத்துகளுக்குத் தேவையில்லாமல் பாஜக அதீத முக்கியத்துவம் கொடுப்பது சரியல்ல.

அதே நேரத்தில் காங்கிரஸ் மீதான தனது கோபத்தை ராசா மூலமாக திமுக காட்டுகிறது என்று கூறப்படுவதை ஏற்க முடியாது என்றார்.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil