திகார் சிறையில் கைதிகளின் அறைகளை12 மணி நேரம் திறந்து வைக்க முடிவு

புதுடில்லி:திகார் சிறையில் கைதிகளின் அறைகளை, காலை 6 முதல் மாலை 6 மணி வரை பூட்டப்படாமல் திறந்து வைக்க, சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

திகார் சிறையின் தகவல் தொடர்பு அதிகாரி சுனில் குப்தா இது குறித்து கூறியதாவது:தற்போது, கைதிகள் அறை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு, மதியம் 12 மணிக்கு பூட்டப்படும். பிறகு 3 மணிக்கு திறக்கப்பட்டு, மாலை 6 மணிக்கு பூட்டப்படும். போதிய ஊழியர்கள் இல்லாத காரணத்தால், இந்த முறையை கையாண்டு வந்தோம். தற்போது, ஊழியர்கள் “ஷிப்ட்’ முறையில் பணிபுரிவதால், கைதிகளின் அறையை காலை 6 முதல் மாலை 6 மணி வரை திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.நீரிழிவு நோயாளிகள், இருதய நோயாளிகள் உள்ளிட்ட கைதிகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இவர்களுக்கு, மாதம் தோறும் உடல் பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளோம்.
சிறையிலேயே இறந்து விடும் கைதிகளின் உடமைகள், அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். இதுநாள் வரை ஆயுள் தண்டனை பெற்றோர் உட்பட, பல கைதிகள் சிறையில் இறக்க நேரிட்டால், அவர்களைத் தேடி பெரும்பாலும் உறவினர்கள் யாரும் வருவதில்லை. எனவே, அவர்களது உடமைகள் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வந்தது. தற்போது, கைதிகள் இறக்கும் பட்சத்தில், அவர்கள் சிறையில் வேலை செய்து ஈட்டிய பணம், அவர்களது நெருங்கிய உறவினர்களைத் தேடி ஒப்படைக்கப்படும்.இவ்வாறு சுனில் குப்தா கூறினார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil