ஹஸன் அலி கறுப்புப் பணத்தில் பங்கா?- முரசொலி, கலைஞர் டிவிக்கு ஜெ நோட்டீஸ்!

சென்னை: ஹஸன் அலியின் பல்லாயிரம் கோடி கறுப்புப் பணம் மற்றும் வரி ஏய்ப்பில் ஜெயலலிதா வுக்கு பங்கிருப்பதாக செய்தி வெளியிட்ட முரசொலி, கலைஞர் டிவி மற்றும் மிட் டே பத்திரிகை ஆகியவற்றுக்குவக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ஜெயலலிதா.

இது தொடர்பாக, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது வக்கீல் மனோஜ்பாண்டியன் எம்.பி. மூலம் மிட்டே ஆங்கில பத்திரிகை மற்றும் முரசொலி, கலைஞர் டி.வி., போன்றவற்றுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது :

கருப்புப் பண முதலை ஹசன் அலி விவகாரத்தில் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்திகள் வந்துள்ளன. ஹசன் அலியின் பல்லாயிரம் கோடி வரிஏய்பில் தென்னிந்திய பெண் முதல்வர் சம்பந்தப்பட்டுள்ளார் என்று மிட்டே பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதை முரசொலி பத்திரிகை, சுவிஸ் வங்கியில் தொழில் அதிபர் ஹசன்அலிகான் பதுக்கி வைத்துள்ள ரூ.35 ஆயிரம் கோடி கறுப்பு பணம் ஜெயலலிதாவுக்கு சொந்தமானது என செய்தியாக்கி வெளியிட்டுள்ளது.

கலைஞர் டி.வி.யிலும் இச்செய்தி ஒளிபரப்பப்பட்டுள்ளது. இச் செய்தி அவதூறானது. உண்மைக்கு புறம்பானது.

ஜெயலலிதாவுக்கும், ஹசன்அலிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. திட்டமிட்டு காழ்ப்புணர்ச்சியோடு ஜெயலலிதா பெயரை இதில் இணைத்து அவதூறு பரப்பப்பட்டு உள்ளது. வெளிநாட்டு பாங்கிகளில் கறுப்புபணத்தை பதுக்கியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தி வருகிறார்.

அப்படிப்பட்டவர் இச்செய்தி மூலம் களங்கப்படுத்தப்பட்டுள்ளார். இச்செய்தியை வெளியிட்டமைக்காக ஜெயலலிதாவிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையேல் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும்.

-இவ்வாறு நோட்டீசில் குறிப்பிட்டு உள்ளது.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil